கட்சியிலிருந்து கூப்டாங்க... பிரச்சாரம் செய்தேன் - ஏன் அரசியலுக்கு வரல தெரியுமா? - சகாயம் ஐஏஎஸ்
மதுரை: தமிழ்நாட்டில் ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்ற நிலை இருப்பதாகவும் அதை ஏற்பவர்களால் மட்டுமே அரசியலில் நீடித்து இருக்க முடியும் என்று முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி என மக்களிடம் நன்மதிப்பை பெற்ற சகாயம் அரசியலுக்கு வர வேண்டும் என ஒரு காலத்தில் அவர் பின்னால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அணி வகுத்து நின்றனர்.
மக்கள் பாதை என்ற பெயரில் இயக்கத்தை தொடங்கி சகாயத்தின் படத்தோடு பல்வேறு நலத்திட்ட பணிகளையும் அவர்கள் மேற்கொண்டு வந்தனர்.

மீண்டும் சகாயம்
இதனிடையே தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு சில வாரங்கள் முன்பாக சகாயம் பதவி விலகினார். அவர் ரஜினி தொடங்கும் கட்சியில் சேர இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. அதன் பின்னர் சகாயம் குறித்து செய்திகள் பெரியளவில் வரவில்லை. இந்த நிலையில், மதுரை உலக தமிழ் சங்க வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் கலந்துகொண்டார்.

தமிழ்நாடு அரசு பணியில் வட இந்தியர்கள்
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தமிழகத்தில் 90 லட்சம் பட்டதாரிகள் அரசு வேலைக்காக காத்து கிடக்கின்றனர். ஆனால், போலிச் சான்றிதழ் கொடுத்து ஆயிரக்கணக்கான வட இந்தியர்கள் அரசு வேலைக்கு சேர்ந்திருப்பதாக வெளியான செய்தி வருத்தமளிக்கிறது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நுழைவுத் தேர்வு வேண்டாம்
மத்திய அரசின் பல்கலைக்கழகங்களில் நுழைவுத் தேர்வை ரத்து செய்திட வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே கிராமபுற ஏழை மாணவர்களால் படிக்க முடியும். மாணவர்கள் ஒழுக்கம் தவறி செல்வதற்கு சமூகமும் ஒரு காரணம். மாணவர்களும் இளைஞர்களும் போதையின் பிடியில் சிக்காமல் இருக்க வேண்டும். பெற்றோர்கள் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும். அவர்களோடு பேசி தீர்வை ஏற்படுத்த வேண்டும்.

அரசியலுக்கு வராதது ஏன்?
தமிழ்நாடு அரசு தமிழ் மண்ணுக்காகவும் ஈழத் தமிழர் நலனுக்காகவும், சாதிக்கு எதிராகவும் செயல்படும் என்று நம்புகிறேன். தமிழ்நாட்டில் ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை நீடித்து வருகிறது. இதனை ஏற்றுக்கொண்டால் மட்டுமே அவர்களால் அரசியலில் நிலைத்து நிற்க இயலும். என்னால் அப்படிப்பட்ட அரசியலை செய்ய முடியாது.

அரசியல் கட்சியில் சேர அழைப்பு
நான் 7 ஆண்டுகளாக அதிகாரமே இல்லாத பணியில் இருந்தேன். அதனாலேயே வேலையை விட்டு விலகினேன். அதற்கு அரசியல் காரணம் அல்ல. அப்போது ஒரு முன்னணி கட்சியிலிருந்து என்னை அழைத்தார்கள். நான் செல்லவில்லை. எனது கொள்கையை பிடித்த இளைஞர்கள் 15 பேர் தேர்தலில் நின்றனர். அவர்களுக்காக பிரச்சாரம் செய்தேன்." என்றார்.












Click it and Unblock the Notifications