கோவில் விவகாரம்.. நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு
மதுரை: திண்டுக்கல் பெருமாள்கோவில்பட்டியில் நிலப் பிரச்சனையில் உள்ள கோயிலில் வழிபாடு நடத்துவது தொடர்பான உத்தரவை நடைமுறைப்படுத்தாததால் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் உத்தரவிட்டுள்ளார். தனி நீதிபதியின் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை விதித்துள்ளதால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அருகே உள்ள பெருமாள் கோவில்பட்டியில் இந்து மற்றும் கிறிஸ்தவ மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் மண்டு கருப்பணசாமி கோயில் அமைந்துள்ளது. இந்த மண்டு கருப்பசாமி கோவில் முன்பு அமைந்துள்ள காலி இடத்திற்காக கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துக்கள் ஆகிய இரு தரப்பினர் இடையே பல வருடங்களாக பிரச்சனை இருந்து வருகிறது.

இந்த நிலையில் இந்தக் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என இந்து சமுதாய மக்களின் சார்பில் சித்திரபால்ராஜ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை தனி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் கிறிஸ்துவ சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தீபம் ஏற்றக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் பெருமாள் கோவில்பட்டி கிராமத்திற்கு மட்டும் 144 தடை உத்தரவை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் பிறப்பித்தார். இதையடுத்து 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
144 தடை உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் ஆகியோர் நேரில் ஆஜராக தனி நீதிபதி உத்தரவிட்ட நிலையில் அவர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இதையடுத்து இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில், மண்டு கருப்பண்ணசாமி கோவிலை திறந்து பூஜைகள் செய்யவும், கார்த்திகை தீபத்தை ஏற்றவும் அனுமதி வழங்கி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுகளுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், பெருமாள்கோவில்பட்டியில் நிலப் பிரச்சனையில் உள்ள கோயிலில் வழிபாடு நடத்துவது தொடர்பான உத்தரவை நடைமுறைப்படுத்தாததால் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் உத்தரவிட்டுள்ளார். தனி நீதிபதியின் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை விதித்துள்ளதால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications