திருப்பரங்குன்றம் மக்களே அமைதியா இருக்காங்க.. நீங்க சண்டைபோட வச்சிருவீங்க போல.. ஐகோர்ட் கிளை காட்டம்
மதுரை: திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது. "திருப்பரங்குன்றம் மக்களே அமைதியாக உள்ளனர். இப்படி வழக்கு தாக்கல் செய்து நீங்கள் சண்டை போட வைத்துவிடுவீர்கள். ஏன் இதுபோன்ற வழக்குகளை தாக்கல் செய்கிறீர்கள்?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் தர்ஹா தொடர்பான விவகாரம் அண்மைக்காலமாக பெரும் புயலைக் கிளப்பி வருகிறது. சிக்கந்தர் தர்ஹாவில் கந்தூரி கொடுப்பதை போலீசார் தடுத்ததால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதற்கு எதிராக இந்துத்வ அமைப்புகள் போராட்டத்தில் இறங்கின. இந்த விவகாரம் சர்ச்சையாக வெடித்துள்ளது.

இந்நிலையில், இந்து தர்ம பரிஷத் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தனர். அதில், திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வலியுறுத்தி, இந்து முன்னணி அமைப்பின் சார்பில் பிப்ரவரி 4 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. பிப்ரவரி 2 ஆம் தேதி சட்ட ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்டது.
காவல்துறை தரப்பில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் அதில் கலந்து கொள்ள வேண்டாம் எனவும், அதனை மீறி வருபவர்கள் மீதும், அவர்களுடைய வாகனங்கள் மீதும், சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட ஆட்சியரால் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் வாகனங்களை தடுக்கும் விதமாக காவல்துறையினர் பிறப்பித்ததை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். திருப்பரங்குன்றம் மலையை தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். திருப்பரங்குன்றம் மலைக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என தனியே பல்வேறு மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்குகள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில், "இரு தரப்பினரும் திருப்பரங்குன்றம் மலையை உரிமை கோருவதாக சண்டையிட்டு வருவதால் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொணரலாம்" என தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், "திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள மக்கள் சண்டையிடவில்லை என்றாலும் நீங்கள் இது போன்ற வழக்குகளை தாக்கல் செய்து சண்டை போட வைத்து விடுவீர்கள் போல.. ஏன் இது போன்று செய்கிறீர்கள்?" என கேள்வி எழுப்பினர்.
அப்போது, வழக்கில் இடையீட்டு மனு தாக்கல் செய்தவர்கள் தரப்பில், "வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. வழிபாட்டுத் தலங்கள் குறித்து வழக்குகளை விசாரணை செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு உள்ள நிலையில் இந்த வழக்குகளை விசாரிக்க முடியாது என வாதிடப்பட்டது.
வழிபாட்டுத் தலங்கள் குறித்து உச்ச நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால் வழக்குகள் அனைத்தையும் தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர். தொல்லியல் துறை குறித்து வழக்கில் மனுதாரர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகி உரிய மனு அளித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications