தேர்தல் ரிசல்ட்டுக்கு பிறகு அதிரடி முடிவு? ஓபிஎஸ்ஸை அதிமுகவில் சேர்க்க திட்டம்? உதயகுமார் ‘பளிச்’!
மதுரை: அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் சேர்க்கப்பட உள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் இதுகுறித்துப் பேசியுள்ளார்.
கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் அதிமுகவில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் பொதுச் செயலாளராகி உள்ள நிலையில், நீதிமன்றமும் அவருக்கு சாதகமாகவே தீர்ப்பளித்தது. அதிமுகவை கைப்பற்ற தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வந்தார் ஓபிஎஸ்.

அதிமுக - ஓபிஎஸ்: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை பயன்படுத்த கூடாது என தடை விதிக்க கோரி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் தனி நீதிபதி, அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பயன்படுத்த கூடாது என தடை விதித்து கடந்த மார்ச் 18ஆம் தேதி உத்தரவிட்டார். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர். அதேநேரம் இரட்டை இலை சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தை அணுக எந்த தடையும் கிடையாது என்று கூறி, இந்த வழக்கில் இபிஎஸ் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூன் 10ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
தனியாக: லோக்சபா தேர்தலில் அதிமுக தனி அணியாகப் போட்டியிட்ட நிலையில், பாஜக கூட்டணியில் இணைந்து ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்டார் ஓ.பன்னீர்செல்வம். தேர்தல் முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வெளிவரும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் வெல்வாரா என்பது தெரியவரும்.
ஓபிஎஸ்ஸை சேர்க்க முடிவு?: இதற்கிடையே, ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவில் சேர்த்துக்கொள்ளப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. 2026 சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு எடப்பாடி பழனிசாமி முக்கிய முடிவை எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவுகள் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்றும், மீண்டும் ஒன்றுபட்ட அதிமுகவை உருவாக்கினால் தனித்து நின்றே ஜெயிக்க முடியும் என மூத்த அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறி இருப்பதாகவும், ஓபிஎஸ்ஸை மீண்டும் இணைப்பதற்கான முயற்சிகள் திரைமறைவில் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆர்பி உதயகுமார் விளக்கம்: தேர்தல் முடிவுகள் வந்த பிறகு இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி அதிரடி முடிவை எடுக்க வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
அப்போது பேசிய அவர், "அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் சேர்ப்பதாக வரும் செய்திகள் துளியும் உண்மை இல்லை. அதிமுக தனது வரலாற்றில் அதிக அளவில் வழக்குகளை சந்தித்ததில்லை. அதிமுகவை அதிக வழக்குகளை சந்திக்க வைத்தவர் ஓ.பன்னீர்செல்வம். ஓபிஎஸ் தனது சுயலாபத்துக்காக, பதவிக்காக அதிமுக மீது பல்வேறு வழக்குகளை தொடர்ந்து தாக்கல் செய்து வந்தவர்.
அதிமுக பின்னோக்கிச் சென்றது: ஓபிஎஸ்-ன் நடவடிக்கைகளால் அதிமுக பின்னோக்கி சென்றது. அதிமுக பிரிவதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். தனக்குப் பதவி இல்லை என்பதால் அதிமுகவை பிரிக்க திட்டமிட்டார். கட்சியின் முக்கியத்துவம், நலன் கருதி ஓபிஎஸ் மீண்டும் அதிமுகவில் இணைக்கப்பட்டார்.
அதிமுகவின் முக்கிய முடிவுகளில் மறுப்பு தெரிவிப்பார் அல்லது மௌனம் காப்பார். ஓபிஎஸ்-ன் நடவடிக்கைகளால் அதிமுக வளர்ச்சி அடையாமல் பின்னோக்கி சென்றது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ரவீந்திரநாத் தேனியில் வெற்றி பெற்றது அதிமுகவின் வெற்றி ஓபிஎஸ்-ன் வெற்றி அல்ல." எனத் தெரிவித்துள்ளார்.
ஆன்ட்டி டி.எம்.கே: மேலும் "அதிமுக என்பது அண்ணா திமுக மட்டுமல்ல, ஆன்ட்டி டி.எம்.கே என்பதாகும். அதிமுகவை குழி தோண்டி புதைக்கும் நடவடிக்கையில் ஓபிஎஸ் ஈடுபட்டார். ஒ.பி.எஸ் அதிமுக கட்சிக்குள் பேசி தீர்க்க வேண்டிய பிரச்சனைகளை பல்வேறு வழக்குகளாக நீதிமன்றங்களில் தொடுத்தார்.
சிம்ம சொப்பனம்: எனக்கு முதலமைச்சர் பதவி கொடுங்கள் என எடப்பாடி பழனிசாமி எந்த நேரத்தில் யாரிடமும் கேட்டதில்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி நீடிக்காது என கூறினார்கள், ஆனால் நான்கரை ஆண்டு காலம் சிறப்பான ஆட்சி கொடுக்கப்பட்டது. மத்திய மாநில அரசுகளுக்கு சிம்ம சொப்பனமாக எடப்பாடி பழனிசாமி உள்ளார்.
ஓ.பன்னீர்செல்வத்தை இணைப்பதன் மூலம் மீண்டும் ஒரு விஷப்பரீட்சைக்கு அதிமுக தயாராகவில்லை. தொண்டர்களின் எண்ணத்தின் அடிப்படையில் அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமி வழிநடத்தி செல்கிறார். எந்த காலத்திலும் ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இணைக்கப் போவதில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதலோடு சொல்கிறேன்." எனக் கூறியுள்ளார்.
இடையூறு: மேலும், “தேர்தலின்போது அதிமுகவுடன் யார் கூட்டணி பேசுகிறார்களோ அவர்களை டெல்லியில் இருந்து வந்து தூக்கிச் சென்றனர். ஆளுநர் ஆக்குகிறோம், மத்திய அரசில் அமைச்சர் ஆக்குகிறோம் என சொல்லி எங்களுக்கு இடையூறு செய்தனர்." எனக் கூறியுள்ளார் ஆர்பி உதயகுமார்.
முன்னதாக, அதிமுகவில் மீண்டும் ஓ.பன்னீர் செல்வத்தை சேர்த்துக்கொள்வீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுகவில் 2 கோடி தொண்டர்களில் நானும் ஒருவன், அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது 2 கோடி அதிமுக தொண்டர்கள் எடுத்த முடிவு, ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவிலிருந்து நீக்க எடப்பாடி பழனிச்சாமி எடுத்த முடிவு அல்ல எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications