ஓபிஎஸ் அணி வருவதற்கு வாய்ப்பு.. திமுக கூட்டணியில் நடக்கும் மாற்றம்! திருமாவளவன் சொன்ன பாயிண்ட்
மதுரை: தமிழக அரசியலில் ஓ.பன்னீர்செல்வம் தனித்து விடப்பட்டிருக்கிறார். இந்நிலையில், அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்திருந்தார். எனவே அவர் விரைவில் திமுகவில் இணையலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.
கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதம் சென்னையில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் வைத்து ஓ.பன்னீர்செல்வத்தை, எடப்பாடி பழனிசாமி நீக்கியிருக்கிறார். இதனையடுத்து அதிமுக தொண்டர் உரிமை மீட்புக்குழுவை தொடங்கி அதிமுகவில் இணைய முயன்று வந்தார் ஓபிஎஸ்.

ஆனால், அவரது முயற்சிகள் எதுவும் பலன் கொடுக்கவில்லை. டிடிவி தினகரன் பாஜகவுடன் கூட்டணி வைத்துவிட்டார். அதேபோல, ஓபிஎஸ் அணியில் இருந்த வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ், ஜே.சி.டி பிரபாகரன் ஆகியோர் திமுகவுக்கும், தவெகவுக்கும் பறந்துவிட்டனர். கடைசியாக ஓபிஎஸ் கூட இருந்தது அவரது வளர்ப்பான தர்மர் எம்பிதான். ஆனால், அவர் கூட கடைசியில் எடப்பாடியுடன் சேர்ந்துவிட்டார். தேர்தல் களம் எதிர்பாராத மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது.
இப்படியான தனித்துவிடப்பட்ட ஓபிஎஸ் கடைசி வரை பாஜகவை நம்பியிருந்தார். ஆனால், பாஜகவும் அவரை கைவிட்டுவிட்டது. இதனையடுத்துதான் நேற்று முன்தினம் அந்த சம்பவம் நடந்தது. அதாவது ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ ஐயப்பன்,
"பள்ளி செல்லும் குழந்தைகளுக்காக முதல்வர் கொண்டுவந்த காலை உணவு திட்டம் அருமையான திட்டம். குழந்தைகளுக்கு தாயாக இருந்து காலையில் சுடச்சுட உணவை வழங்குகிறார் முதல்வர். நடைபெற இருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றிபெற்று எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் ஆசியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தமிழக முதல்வராக வருவார்" என்று சட்டசபையில் பேச, முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட மொத்த அவையும் ஒரு நிமிடம் ஸ்டன் ஆனது.
இந்த ஷாக் குறைவதற்குள், சட்டப்பேரவையை முடித்து வெளியே வந்த முதலமைச்சரை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தது இன்னும் விவாதங்களை கிளப்பியது. அன்று இரண்டு முறை முதலமைச்சரை அவர் சந்தித்தார். இதனையடுத்து, ஓபிஎஸ் திமுகவில் இணைவார் என்று பேச்சுக்கள் எழுந்தன. இது குறித்து தற்போது திருமாணவன் பேசியிருக்கிறார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தேமுதிக இந்த கூட்டணியில் இணைந்திருப்பதை விசிக மனப்பூர்வமாக வரவேற்கிறது. அதேபோல ஓபிஎஸ் அணி திமுக கூட்டணிக்குள் வரும் என்று பேசப்பட்டு வருகிறது. இப்படியாக நாளுக்கு நாள் திமுக கூட்டணி வலுப்பெற்று வருகிறது. இந்த கூட்டணியின் வலு குறையாமல், கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்யும் என்று நம்புகிறேன்" என கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications