என்னாது ஸ்மார்ட் சிட்டியா? அப்படி சொல்ல மனசாட்சி இருக்கா?.. வெளுத்து வாங்கிய கமல்ஹாசன்
மதுரை: மதுரை மாநகராட்சியில் குடிநீர் பிரச்சினை, பாதாள சாக்கடைப் பிரச்சினை, போக்குவரத்து நெரிசல் என போர்க்களம் போல் காணப்படுவதை பார்த்தால் யாராவது ஸ்மார்ட் சிட்டி என சொல்ல முடியுமா என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் 22 ஆம் தேதி நடைபெறுகிறது. அரசியல் கட்சி தலைவர்களும் வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார்கள்.
அந்த வகையில் மதுரையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் நேரில் போய் பார்த்த கமல்ஹாசன்அங்கு பிரச்சாரத்தில் பேசினார்.

வளர்ச்சியடையாத மதுரை
அவர் கூறுகையில் மதுரை இன்னும் வளர்ச்சி அடையவில்லை. ரூபாய் 500 கோடியில் மதுரையில் வளர்ச்சித் திட்டங்கள் செய்ததாக கூறுவதை நேரில் பார்க்க முடிகிறதா. நான் 5 வயதில் களத்தூர் கண்ணம்மா படத்தில் நடித்த போது இருந்த மதுரையில் சிறியமாற்றம் மட்டுமே நடைபெற்றுள்ளது என தெரிவித்தார்.

போர்க்களம் போலிருக்கிறதே மதுரை
அதுபோல் அவர் இன்றைய தினம் மதுரையின் நிலை குறித்து ட்வீட் போட்டுள்ளார். அதில் மதுரை மாநகராட்சியின் ஆண்டு வருவாய் சுமார் 586 கோடி. ஆனால், அதற்குரிய நியாயமான வளர்ச்சிப் பணிகள் நிகழவே இல்லை. குடிநீர்ப் பிரச்னை, பாதாள சாக்கடைப் பிரச்னை, போக்குவரத்து நெரிசல், எங்கு பார்த்தாலும் குப்பை கூளங்கள், கைவிடப்பட்ட நீர்நிலைகள். போர்க்களம் போலிருக்கிறது மதுரை.

ஸ்மார்ட் சிட்டியா
மனசாட்சி உள்ள எவரேனும் மதுரையை 'ஸ்மார்ட் சிட்டி' என்றழைக்க முடியுமா? பண்பாட்டுப் பெருமிதம் மிக்க நகரத்தைக் கழக ஆட்சிகள் கைவிட்டு விட்டன. உள்ளாட்சித் தேர்தலில் வென்று மக்கள் பங்கேற்புடன் 'ஏரியா சபைகள்' அமைக்கப்பட்டு இந்தப் பிரச்னைகள் ஒவ்வொன்றாகத் தீர்க்கப்படும் என்றார் கமல்ஹாசன்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல்
மதுரையில் கடந்த அதிமுக ஆட்சியில்தான் ஸ்மார்ட் சிட்டி திட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த திட்டத்தின் கீழ் மதுரை பெரியார் பஸ் நிலையம் இடித்து புதிதாக கட்டப்பட்டது. சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக மத்திய அரசிடம் பல கோடி ரூபாய் நிதி பெறப்பட்டும் பணிகள் ஏதும் நடைபெறாமல் ஊழல் நடந்ததால்தான் சென்னையில் வெள்ள நீர் தேங்கியதாக அதிமுக மீது முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்தார்.












Click it and Unblock the Notifications