போயும் போயும் ஒரு சீட்டுக்காக.. திமுகவின் ஊதுகுழலாக கமல்ஹாசன் மாறிவிட்டார்.. செல்லூர் ராஜு தாக்கு!
மதுரை: திமுகவின் ஊதுகுழலாக கமல்ஹாசன் மாறிவிட்டார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ காட்டமாக விமர்சித்துள்ளார். மநீம - அதிமுக இடையே வார்த்தைப் போர் முற்றி வருகிறது.
சென்னையில் புயல் வெள்ள பாதிப்புகள் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், திமுக அரசுக்கு ஆதரவாக ஒரு பதிவை சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். இதுதொடர்பாக பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் ஒரு பச்சோந்தி போன்றவர், அவரை அரசியல்வாதியாக நான் மதிக்கவில்லை, அவர் கட்சியில் அவரை தவிர வேறு யாரும் இல்லை” எனக் காட்டமாகக் கூறினார்.

இதையடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் நீதி மய்யம் பதிலடி கொடுத்தது. தமிழகத்தின் தலைநகரம் புயல் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது, எங்கோ ஒடிப்போய் பதுங்கிக் கொண்ட எதிர்க்கட்சித் தலைவர், மக்கள் நலனுக்காக களத்தில் நிற்கும் நம்மவரை பச்சோந்தி என்று விமர்சித்திருப்பது கேலிக்கூத்து. பொதுமக்களைப் பற்றிக் கவலைப்படாமல், கூவத்தூரில் கும்மாளம் அடித்துக் கொண்டிருந்தவர்களுக்கு, தனது சம்பாத்தியத்தில் ஒரு பகுதியை மக்களுக்காகச் செலவழித்துக் கொண்டிருக்கும் தலைவரைப் பற்றி விமர்சிக்கத் தகுதி இல்லை என மநீம பதிலடி கொடுத்தது.
செல்லூர் ராஜு பேட்டி: இந்நிலையில், கமல்ஹாசன் பற்றி கடுமையாக விமர்சித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ. மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய செல்லூர் ராஜூ, “சென்னையில் வெள்ளம் வடியவில்லை. மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அரசு செயலிழந்துவிட்டது. 40 நாட்களுக்கு முன்பாகவே புயல் குறித்து வானிலை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டிய நிலையில் திமுக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
முன்னெச்சரிக்கையாக மக்களுக்கு அனைத்துமே செய்துவிட்டோம் எனக்கூறிய அமைச்சர்கள் கடைசி வரை எதையுமே செய்யாமல் மக்களை ஏமாற்றிவிட்டனர். அவர்கள் முதலமைச்சரையும் ஏமாற்றிவிட்டனர். அமைச்சர்கள் சொன்ன பொய்களால் மக்கள் தங்கள் உடைமைகளையும், சொத்துக்களையும் இழந்துவிட்டனர்.
உங்க வீட்டுல இருந்தா எடுத்து கொடுக்குறீங்க?: பல ஆண்டுகளுக்கு பின் வரலாறு காணாத மழை சென்னையில் பெய்தது. அதிமுக ஆட்சியில் 5 நாட்கள் மழை பெய்தது. அடுத்தடுத்து வர்தா கஜா புயல்களை எதிர்கொண்டோம். இருந்தாலும் மக்கள் எதிர்பார்க்காத அளவுக்கு நிதியை கொடுத்தோம். நிவாரண பொருட்களை கொடுத்தோம். யாரையும் கட்டாயப்படுத்தி நிவாரண நிதி பெறவில்லை. வரும் நிதியை வைத்து மக்களுக்கு நிவாரணம் கொடுத்தோம். மழைக்காலத்தில் ஒரு இராணுவ தளபதியை போல் ஜெயலலிதா செயலாற்றினார்.
புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள 6,000 நிவாரண தொகையை 10 ஆயிரமாக உயர்த்தி கூடுதலாக அரசு வழங்க வேண்டும். அரசு அதிகாரிகள் இதுபோன்ற நேரங்களில் மக்களுக்கு பெரும் தொல்லையை கொடுப்பார்கள். பாதிப்பை கண்டு கொள்ளமாட்டார்கள். அரசாங்கம் அதனை கவனித்து சரி செய்ய வேண்டும்.
அரசாங்கம் செயலிழந்ததால் தான் உயிரிழப்பு ஏற்பட்டது. சென்னையின் நிலைமைக்கு திமுக அரசு தான் முழு பொறுப்பு. திமுக அரசு என்ன தங்கள் வீட்டில் இருந்தா நிதியை எடுத்து கொடுக்க போகிறார்கள்? அரசு பணத்தை தான் கொடுக்கிறார்கள். மக்கள் நிம்மதியடையும் வகையில் நிவாரணத்தொகையை வழங்க வேண்டும்.” என்றார்.
இனி எடப்பாடி ஒரு வார்த்தை பேசினால் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றாமல் விடமாட்டோம்.. மநீம ஆவேசம்!
கமல் திமுகவின் ஊதுகுழல்: மேலும் பேசிய அவர், “கமல்ஹாசனுக்கு அரசியல் அரிச்சுவடி தெரியாது. தேர்தலில் ஒரு சீட்டுக்காக திமுகவிற்கு லாலி பாடுகிறார். திமுகவின் ஊதுகுழலாக கமல்ஹாசன் மாறிவிட்டார். அவர் படத்தை மக்கள் இனி எந்த மாவட்டத்திலும் பார்க்கமாட்டார்கள். துன்பத்தில் உள்ள மக்களுக்கு ஆதரவாக அவர் பேசவில்லை.
தொடர்ந்து பதுங்கு குழியில் இருந்த கமல்ஹாசன் தான் தற்போது வெளியே வந்துள்ளார். அவர் அரசியல் நாகரிகமற்றவர். மதுரையில் கட்சி தொடங்கி வீராப்பாக பேசிய கமல்ஹாசனின் வீராப்பு இப்போது எங்கே சென்றது? கமலஹாசன் திமுகவிற்கு ஆதரவாக பேசினால் இனிமேல் அவர் ரசிகர்களும், விநியோகிஸ்தர்களும் அவரைவிட்டு விலகி அவர் நிழல் கூட அவருடன் இருக்காது.” எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications