பழனி கோவில் உண்டியலில் குவிந்து கிடந்த காகிதங்கள்.. அதிகாரிகளுக்கு வந்த சந்தேகம்! கடைசியில் ட்விஸ்ட்
திண்டுக்கல்: முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி கோவிலில், நூதன முறையில் உண்டியல் பணத்தை அபேஸ் செய்து வந்த கூலித்தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார். பக்தர்கள் அதிகளவில் கூட்டமாக வரும் நேரத்திலும் தன் கை வித்தையை காட்டியுள்ளார் இந்த தொழிலாளி. தற்போது அந்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அறுபடை வீடுகளில் 3 ஆம் வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள். நேர்த்திக்கடன் முக்கியமான விழா நாட்களில் ஏராளமான பக்தர்கள் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்கள் அங்குள்ள உண்டியல்களில் பணம், நகைகளை காணிக்கையாக செலுத்துவது வழக்கம்.

பழனி முருகன் கோவில் உண்டியல்
பழனி முருகன் கோவிலில், கோவில் உட்பிரகாரம், வெளிப்பிரகாரம், கொடிமரம் ஆகிய பகுதிகளில் உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன. சமீபத்தில் கூட உண்டியல் உள்ள பணத்தை எண்ணும் பணி நடந்தது. அப்போது ஒரு உண்டியலில் மட்டும் அதிகளவில் காகிதங்கள் கிடந்தன. கோவிலுக்கு வெளிப்பிரகார பகுதியில் இருந்த அந்த உண்டியலில் தான் இப்படி அதிகளவில் காகிதங்கள் கிடந்தன.
இதனால் கோவில் நிர்வாகிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. கோவிலில் வெளிப்பிரகாரத்தில் உள்ள அந்த உண்டியலில் திருட்டு நடைபெறுவதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் உண்டியலை அவ்வப்போது ஊழியர்கள் கண்காணித்து வந்தனர். அப்போது சாமி கும்பிடுவது போல் வந்த 35 வயது மதிக்கத்தக்க நபர், உண்டியலில் பணம் போடுவது போல் பாவனை செய்து அட்டை ஒன்று உள்ளே வைக்கிறார்.
காகித அட்டையை உள்ளே வைத்து
பின்னர் அங்கிருந்து சிறிது தூரம் நகர்ந்து போய் நின்று கொள்கிறார். பின்னர் வேறு யாராவது பக்தர்கள் பணத்தை உண்டியலில் போட்டுவிட்டு சென்றதும், அந்த நபர் நைசாக வந்து காகித அட்டையை தூக்கி பணத்தை எடுத்துள்ளார். அதாவது அவர் அட்டையை உண்டியலின் துவாரத்தில் வைத்துவிடுவார். இதனால் மற்றவர்கள் உண்டியலில் பணத்தை போடும் போது முழுவதுமாக உண்டியல் உள்ளே செல்லாமல், மேலோட்டமாக பணம் தெரியும்.
இதே பாணியில் அங்கு உண்டியல் பணத்தை திருடுவதையே வழக்கமாக கொண்டுள்ளார். இதை கவனித்த ஊழியர்கள் அதிகாரிகளிடம் அந்த நபரை பிடித்து கொடுத்தனர். இதையடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த நபரை கைது செய்தனர். விசாரணையில் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள போடுவார்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளியான மகேந்திரன் (வயது 37) என்பது தெரியவந்தது.
பக்தர்கள் அதிர்ச்சி
பழனி முருகன் கோவில் நூதன முறையில் உண்டியலில் இருந்து பணத்தை திருடியதையும் ஒப்புக்கொண்டார். மேலும் அவரிடம் இருந்த ரூ.5 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பழனி முருகன் கோவிலில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் அதிகம் வரும் நிலையிலும், துணிச்சலுடன் இந்த நபர் நூதன முறையில் பணத்தை திருடி வந்துள்ளது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications