எக்ஸிட் போல் முடிவுகள் எல்லாம் பொய்.. யாரோ கொடுத்த கட்டளை தான் அது.. அமைச்சர் பிடிஆர்!
மதுரை : யாரோ சொன்ன கட்டளைக்கு ஏற்ப எக்ஸிட் போல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக முடிவடைந்துள்ள நிலையில், அதில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. இதனிடையே சனிக்கிழமை 7வது கட்ட லோக்சபா தேர்தல் முடிவடைந்த பின் ஏராளமான எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகின. அதில் பெரும்பாலான எக்ஸிட் போல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாகவே அமைந்துள்ளது.

கடந்த தேர்தலை விடவும் பாஜக இம்முறை கூடுதலாக சில இடங்களை பெற்று ஆட்சியமைக்கும் என்று சில நிறுவனங்கள் கணித்துள்ளன. பெரும்பான்மைக்கு 272 தொகுதிகள் தேவையான நிலையில், பாஜக 350 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெறும் என்று கணிக்கப்பட்டுள்ளன. இந்த கணிப்புகளை இந்தியா கூட்டணி கட்சிகள் மொத்தமாக புறந்தள்ளிவிட்டன.
காங்கிரஸ் கட்சி சார்பாக 2004 லோக்சபாவிலும் இப்படிதான் நடந்தது என்று பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் உள்ள கருணாநிதி சிலைக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதன்பின் எக்ஸிட் போல் முடிவுகள் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், நாளை முடிவு வெளியாகும் சூழலில், எனக்கு தெரியும்.. உனக்கு தெரியும்.. என்று கூறுவது தேவையில்லாத கருத்துகள். ஆனால் ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். சில 5, 6 கருத்துக் கணிப்புகள் எடுக்கும் நிறுவனங்களை வைத்து அப்படியே அச்சடித்து கொடுத்த பத்திரிகையை போல் சில நம்பர்களை கூறுவார்கள்.
இந்திய வரலாற்றில் 2 மாதங்களுக்கு மேல் நடந்த தேர்தல் இதுதான். இது அறிவார்ந்த நபர்கள் நம்ப முடியாத வகையில் உள்ளது. எக்ஸிட் போல் முடிவுகள் கொஞ்சம் நம்பும்படியாக இல்லை. சில எக்ஸிட் போல் முடிவுகளில் போட்டியிட்டதற்கும் அதிக தொகுதிகளில் பாஜக வெற்றிபெறும் என்று கூறியுள்ளனர். யாரோ சொன்ன கட்டளைக்கு ஏற்ப கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளனர். அந்த நம்பருக்கும் நாளை வெளியாகும் முடிவுகளுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications