மதுரை முஸ்லிம் காவலர் தாடி வளர்த்ததற்காக 2 ஆண்டுக்கான சம்பள உயர்வு நிறுத்தம்.. ஹைகோர்ட் அதிருப்தி
மதுரை: பல்வேறு மதங்கள், பழக்கவழக்கங்களை கொண்டது நம் நாடு. நம்பிக்கைகள் மற்றும் கலாசாரத்தின் பன்முகத்தன்மையுடன் விளங்குகிறது. முஸ்லிம் போலீஸ்காரர் தனது தாடியை பராமரிக்க உரிமை உண்டு. அவரின் சம்பள உயர்வை நிறுத்தி வைத்தது ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
மதுரையை சேர்ந்த போலீஸ்காரர் அப்துல்காதர் இப்ராகிம், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், நான் 2009-ம் ஆண்டில் 2-ம் நிலை காவலராக பணியில் சேர்ந்தேன். நான் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் தாடி வளர்த்து வருகிறேன். மெக்கா மற்றும் மதினாவுக்கு செல்வதற்காக எனக்கு 2018-ம் ஆண்டில் எனக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அந்த நேரத்தில் எனது இடது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விடுமுறையை நீட்டிக்கும்படி கோரிக்கை வைத்தேன்.

இதற்காக போலீஸ் உயர் அதிகாரியை நான் சந்தித்தேன். அப்போது உயர் காவல் அதிகாரி எனது தோற்றம் மற்றும் தாடி குறித்து கேள்வி எழுப்பினார். மேலும் விடுப்பு எடுக்க அனுமதி மறுத்தார். பின்னர் மெமோவும் அனுப்பினர். அதற்கு உரிய விளக்கம் அளித்தேன். இதை முறையாக பரிசீலிக்காமல் 2 ஆண்டுக்கான சம்பள உயர்வை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்கள். எனவே சம்பள உயர்வு நிறுத்தத்தை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்" இவ்வாறு அப்துல்காதர் இப்ராகிம் மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி விக்டோரியா கவுரி பிறப்பித்த உத்தரவு பின்வருமாறு: "மத நம்பிக்கை அடிப்படையில் தாடி வளர்ப்பது குறித்து ஏற்கனவே தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த தகவல் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மனுதாரர் தனது மதத்தை பின்பற்றி வாழ்நாள் முழுவதும் தாடி வளர்ப்பதை உயர் போலீஸ் அதிகாரி பாராட்டி, சம்பள உயர்வை நிறுத்தி வைத்ததை ரத்து செய்திருக்க வேண்டும்.
ஆனால் தாடி வளர்த்த காவலர் மீது குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு இருக்கிறது. மனுதாரர் முஸ்லிம் என்பதால் தாடியை பராமரிக்க உரிமை உண்டு என்பது தெரிய வருகிறது. பல்வேறு மதங்கள், பழக்க வழக்கங்களை கொண்டது நம்முடைய நாடு. நம்பிக்கைகள் மற்றும் கலாசாரத்தின் பன்முகத்தன்மையுடன் திகழ்கிறது. எனவே மனுதாரர் ( முஸ்லிம் காவலர்) தனது தாடியை பராமரிக்க உரிமை உண்டு. அவரின் சம்பள உயர்வை நிறுத்தி வைத்தது ரத்து செய்யப்படுகிறது. இதுகுறித்து மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் 8 வாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு நீதிபதி விக்டோரியா கவுரி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications