"சன்னிதானம் மீது FIR இருக்கு.. மதுரை ஆதீனம் பதவி விலக வேண்டும்".. விஸ்வலிங்க தம்புரான் கோரிக்கை
மதுரை: மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிகர் தார்மீக அடிப்படையில் விலக வேண்டும் என மதுரை ஆதீன விஸ்வலிங்க தம்புரான் தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை தலையிட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை ஆதீனமாக இருந்த அருணகிரிநாதரின் மறைவுக்குப் பிறகு ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள், மதுரை ஆதீன மடத்தின் பொறுப்பு வந்தார். 293ஆவது மதுரை குருமகா சந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹரர் ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் நியமனம் செய்யப்பட்டார்.

அண்மையில் மதுரை ஆதீனம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவும் செய்தனர். இதையடுத்து, மதுரை ஆதீனத்திற்கு எதிராக மறைந்த அருணகிரிநாதரின் நினைவிடத்தில் அமர்ந்து இளைய ஆதீனம் தம்புரான் உண்ணாவிரதம் மேற்கொண்டார். அடுத்த ஆதீனத்தைத் தேர்வு செய்வதில் தன்னிச்சையாக மதுரை ஆதீனம் செயல்படுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்நிலையில், இன்று மதுரை ஆதீனத்துக்கு எதிராக மதுரை மாவட்ட ஆட்சியரிடம், மடத்தின் தம்புரான் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், மதுரை ஆதீன மட விவகாரத்தில் அறநிலையத்துறை தலையிட வேண்டும் என தம்பிரான் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய விஸ்வலிங்க தம்பிரான், "மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிகர் விலக வேண்டும். சாதாரண ஒரு அரசு வேலையில் இருப்பவர்கள் மீது கூட எஃப்.ஐ.ஆர் இருக்கக்கூடாது. மதுரை ஆதீனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் ஆதீன மட விவகாரங்களில் இருந்து விலக வேண்டும். மதுரை ஆதீனத்தில் பாரம்பரியமாக கடைபிடிக்கும் மரபுகளை தற்போதைய ஆதீனம் மீறுகிறார்.
தார்மீகமாக விலகி இருந்து வழக்கில் இருந்து விடுபட்ட பின்னரே மதுரை ஆதீனம் தனது பணிகளை தொடர வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை தலையிட்டு பிற ஆதீனங்களுடன் ஆலோசித்து இளைய சன்னிதானத்தை தேர்வு செய்ய வேண்டும். மதுரை ஆதீன மடத்தில் அரசியல் கலப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
நான் 2018 ஜூலை முதல் 292-வது ஆதீனமாக இருந்த குருமகா சன்னிதானத்தின் கரங்களால் தீட்சை பெற்று, மதுரை ஆதீன மடத்தின் தம்புரானாகப் பணிபுரிந்து வருகிறேன். 292-வது ஆதீனம் 2021-ல் மகாசித்தி அடைந்த பிறகு, தற்போதைய 293-வது ஆதீனத்தின் கீழ் தம்புரானாகப் பணிபுரிந்து வருகிறேன்.
மதுரை ஆதீன மடத்தின் 292-வது குருமகா சன்னிதானம் விருப்பப்படி, அடுத்த ஆதீனமாக நான்தான் வரவேண்டும். ஆனால் தற்போதைய ஆதீனம், 292-வது குருமகா சன்னிதானம் மற்றும் தருமபுரம் ஆதீனத்தின் கட்டளையை நிறைவேற்றாமல் வேறு ஒருவருக்குப் பட்டம் சூட்டத் திட்டமிட்டுள்ளார். மதுரை ஆதீனம், தருமபுரம் ஆதீனத்துடன் ஆலோசனை செய்து 292-வது குருமகா சன்னிதானத்தின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications