மதுரை ஆதினத்தின் ஆசிரியர் கனவு! மாத இதழ் தொடங்கும் திட்டத்துடன் தீவிர ஆலோசனை!
மதுரை: மதுரை ஆதினம் மாத இதழ் ஒன்றை தொடங்கும் திட்டத்துடன் அது தொடர்பான ஆலோசனைகள் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த மாத இதழின் ஆசிரியராக தாமே இருக்க விரும்பும் அவர் புதிய பத்திரிகை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் என்னென்ன என்பதை அலசி ஆராய்ந்து வருகிறாராம்.
இதனிடையே இதற்கு முன்னதாக மதுரை ஆதினமாக இருந்து மறைந்த ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாதர் ஒரு பத்திரிகையாளராக இருந்தும் கூட, அவர் இது போன்று பத்திரிகை தொடங்க வேண்டும் என எண்ணியதில்லை.

மதுரை ஆதினம்
சுமார் 1,300 ஆண்டுகள் பழமைவாய்ந்த மதுரை ஆதினமடத்தின் 293-வது பீடாதிபதியாக ஹரிஹர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் இருக்கிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் தான் இந்தப் பொறுப்புக்கு வந்தார் இவர். இவருக்கு முன்பாக மதுரை ஆதினமாக இருந்த ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாதர் சமூக நல்லிணக்கத்திற்கு மிகச்சிறந்த உதாரணமாக திகழ்ந்தவர். தமிழ் வளர்க்கும் அரும்பணியில் தன்னை முழு மூச்சாக ஈடுபடுத்திக் கொண்ட அவர், சமய வேறுபாடுகளை கடந்தவராக இருந்தார்.

மாத இதழ்
இந்நிலையில் அவரது மறைவுக்கு பிறகு மதுரை ஆதினமாக கடந்த ஆகஸ்ட் மாதம் ஹரிஹர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பொறுப்பேற்றார். அவரும் மறைந்த அருணகிரி நாதரை போல் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதோடு செய்தியாளர்களையும் ஆர்வமுடன் சந்திக்கிறார். அதுமட்டுமல்லாமல் மனதில் தோன்றும் கருத்துக்களையும் ஒளிவுமறைவின்றி எடுத்துரைக்கிறார். இந்தச் சூழலில் மதுரை ஆதினத்துக்கு சொந்தமாக மாத இதழ் ஒன்றை தொடங்கினால் என்ன என்ற யோசனை அவருக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்பார்ப்பு
இதனால் அது தொடர்பாக ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ள அவர், பத்திரிகை நடத்துவதற்கான பொருட்செலவு, ஆள் அம்பு சேனை என சகலவிதத்திலும் யோசித்து வருகிறாராம். மதுரை ஆதின மடத்தின் செயல்பாடுகள், அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள், தமிழ் வளர்ச்சிப் பணிகள் என இன்னும் பல விவகாரங்கள் அந்த மாத இதழில் இடம்பெறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறதாம்.

புதிய முயற்சி
ஹரிஹர தேசிக பரமாச்சாரிய சுவாமிகளுக்கு முன்னதாக மதுரை ஆதின மடத்தின் பீடாதிபதியாக இருந்த ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாதர் பத்திரிகையாளரும் கூட. ஆனால் அவரே முன்னெடுக்காத விஷயத்தை இவர் முன்னெடுத்திருப்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.












Click it and Unblock the Notifications