மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை.. பணியாளர்கள் பற்றாக்குறையால் ஏற்படும் தாமதம்.. பிப்ரவரியில் திறப்பு?
மதுரை: மதுரையில் கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனையின் முதற்கட்ட பணிகள் பிப்ரவரி மாத இறுதிக்குள் நிறைவடையும் என்று தெரிய வந்துள்ளது. பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக கட்டுமான பணிகள் முடிவடையாமல் இழுத்துக் கொண்டிருப்பதாக கூறியுள்ள மதுரை எய்ம்ஸ் நிர்வாகம், விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர முயற்சித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். இந்த எய்ம்ஸ் மருத்துவமனை தோப்பூர் ஊராட்சியின் கோ.புதுப்பட்டி பகுதியில் உலகத் தரத்திலான மேம்பட்ட மருத்துவ வசதிகளுடன் கூடிய அமைக்க பணிகள் நடந்து வருகிறது. மொத்தம் 2 லட்சத்து 31 ஆயிரத்து 782 சதுர அடி பரப்பளவில், ரூ.2,021 கோடி மதிப்பீட்டில் இந்த மருத்துவமனை கட்டப்படுகிறது.

மதுரை எய்ம்ஸ் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 13.05 லட்சம் சதுர அடி பரப்பளவில் மருத்துவக் கல்லூரி கட்டிடம், நர்சிங் கல்வி வளாகம், நிர்வாக மற்றும் ஆடிட்டோரியம் கட்டிடங்கள், பிரதான மருத்துவமனை, புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு உள்ளிட்ட மொத்தம் 13 கட்டிடங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான பணிகளை மருத்துவமனை நிர்வாகம் விரைவுபடுத்தி வருகிறது.
இரண்டாம் கட்டத்தில் 10.26 லட்சம் சதுர அடி பரப்பளவில் ஆடிட்டோரியம், குடியிருப்பு வளாகங்கள், இயக்குநர் பங்களா, ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், ஆயுஷ் மருத்துவ பிரிவு உள்ளிட்ட 16 கட்டிடங்கள் கட்டப்படவுள்ளதாக மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மொத்தமாக 29 கட்டிடங்கள் உருவாக்கப்பட உள்ளன. இதற்கான 3டி மாடல் ஏற்கனவே வெளியிடப்பட்டது.
அதேபோல் எய்ம்ஸ் மருத்துவமனையில் முதற்கட்ட கட்டுமான பணிகள் முடிவடைந்து உடனடியாக வகுப்புகள் ஜனவரி மாத இறுதியில் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் பொங்கல் பண்டிகை முடிவடைந்த போதும், இதுவரை எய்ம்ஸ் மருத்துவமனை பற்றிய எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. டிசம்பர் மாதத்தில் தான் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான குடிநீர் விநியோக டெண்டர் விடப்பட்டது.
தற்போது முதற்கட்ட கட்டடங்களுக்கான பெயிண்ட் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் முதற்கட்ட பணிகள் பிப்ரவரி மாத இறுதிக்குள் முடிக்க பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. பணியாளர்களுக்கான பற்றாக்குறை நிலவி வருவதால், திட்டமிட்டபடி பணிகள் முடிக்க முடியவில்லை என்று சொல்லப்படுகிறது.
சுமார் 7 ஆண்டுகளுக்கும் மேலாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகள் நடந்து வரும் சூழலில், சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாகவாவது திறக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பாட்டுக்கு வரும் பட்சத்தில், ராமநாதபுரம் கல்லூரியில் பயின்று வரும் மாணவர்கள் உடனடியாக மதுரைக்கு மாற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications