மதுரையில் மேம்பாலம் இடிந்துவிழ என்ன காரணம்? புட்டு புட்டு வைத்த அமைச்சர் பிடிஆர்.. தொடங்கிய விசாரணை
மதுரை: மதுரையில் நேற்று நடைபெற்ற மேம்பால விபத்து பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் ஒருவர் பலியான நிலையில் இதற்கு என்ன காரணம் என்று தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கி இருக்கிறார்.
Recommended Video
மதுரை முதல் நத்தம் வரை மொத்தம் 44.3 கி.மீ தூரத்திற்கு தற்போது புறவழி பறக்கும் சாலை மத்திய அரசு மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மத்திய அரசு பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் இந்த சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இரண்டு ஆண்டுகளாக இந்த பணிகள் நடந்து வருகின்றன.
இந்த சாலையின் ஒரு பகுதியாக தல்லாகுளத்திலிருந்து திருப்பாலை வரையிலான 7.1/2 கிலோமீட்டர் தூரத்துக்கு மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. தமிழ்நாட்டில் இரண்டாவது மிக நீண்ட பாலம் ஆகும்.

பாலம்
இந்த பாலம் மிக நீண்டதாக இருப்பதால் இடை இடையே மக்கள் வசதிக்காக இணைப்பு பலம் கட்டப்பட்டுள்ளது. அதாவது பாலத்தின் இடை இடைய கிளை பாலங்கள் அமைக்கப்பட்டு வெவ்வேறு ஊர்களில் வாகனங்கள் வெளியேறும் வகையில் இணைப்பு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.980 கோடி செலவில் இந்த மொத்த சாலை திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மிக நீண்ட பாலம் என்பதால் இதன் கட்டுமான பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது.

விபத்து
இந்த நிலையில்தான் மதுரை நத்தம் சாலையில் நேற்று இந்த மேம்பாலத்தின் இணைப்பு பாலம் இடிந்து விபத்து ஏற்பட்டது. 4 மற்றும் 5-வது தூண்களை இணைக்கும் பாலத்தின் பகுதி திடீரென விழுந்தது. இதில் தூணில் நின்று வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் பால இடிபாடுகளில் சிக்கினார்கள். இதில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஆகாஷ் சிங் என்ற ஊழியர் தலையில் காயம் பட்டு பலியானார். இன்னொரு ஊழியர் உடலில் காயம் அடைந்துள்ளார். இந்த இடிபாடு காரணமாக கட்டுமான பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.மதுரையில் இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை
முக்கியமாக இந்த பகுதியில் அடிக்கடி கீழே பயணம் மேற்கொள்ளும் மக்கள், அருகில் குடியிருக்கும் மக்கள் இந்த விபத்து காரணமாக கலக்கம் அடைந்துள்ளனர். கட்டுமானத்தின் உறுதி தன்மை குறித்தும், மக்களின் பாதுகாப்பு குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன. மதுரையை இந்த சம்பவம் உலுக்கி உள்ள நிலையில், இதற்கு என்ன காரணம் என்று தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கி இருக்கிறார். அவர் அளித்த பேட்டியில் , இந்த விபத்துக்கு முழுக்க முழுக்க தொழில்நுட்ப கோளாறுதான் காரணம்.

கோளாறு
ஹைட்ராலிக் இயந்திரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இந்த இயந்திரங்கள் முறையாக ஆய்வு செய்யப்படாமல், முறையாக பராமரிக்கப்படாமல் பயன்படுத்தி உள்ளனர். இது விபத்துக்கு முக்கிய காரணம். அதேபோல் இந்த பாலத்தின் கட்டுமானத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் முறையாக பயிற்சி பெறவில்லை. ஊழியர்களுக்கு எப்படி இயந்திரங்களை இயக்க வேண்டும் என்ற பயிற்சி அளிக்கப்படவில்லை.

விபத்து
இதுவும் விபத்திற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது. பாலத்தின் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து மேற்கொண்டு முடிவு எடுப்பார். இது தொடர்பாக விசாரணை நடக்க உள்ளது. தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி மூலம் பாலம் கட்டும் ஒப்பந்ததாரரிடம் எங்கே தவறு நடந்தது என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது, என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications