கோர்ட் சொல்றத கேட்க கூடாதுனு கொள்கை வச்சுருக்கீங்களா? தமிழக அரசை விளாசிய உயர்நீதிமன்ற மதுரை கிளை!
மதுரை: நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை நிறைவேற்ற மாட்டோம் என தமிழ்நாடு அரசு முடிவு செய்தது போல தெரிகிறது எனவும், நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதில் பல அதிகாரிகள் தாமதம் செய்கிறார்கள் என உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிருப்தி தெரிவித்துள்ளது.
தூத்துக்குடியில் துணை ஆட்சியராக செல்வநாயகம் என்பவர் பணியாற்றி வந்தார். பணி ஓய்வு பெற வேண்டிய நாளன்று அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சரியான காரணங்கள் சொல்லாமல் தன்னை பணியினை நீக்கம் செய்ததாகவும், நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணத்தை சொல்லி தனது பணி இடைநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் பணி ஓய்வு பெற்றவுடன் வழங்கப்படும் பண பலன்களை வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இதேபோல நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை என வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெல்லையைச் சேர்ந்த முருகேசன் என்பவரும் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்குகள் நீதிபதி பட்டு தேவனந்த் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசின் வருவாய் துறை முதன்மை செயலரான அமுதா ஐஏஎஸ் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது தமிழக அரசு நோக்கி நீதிபதிகள் பல கேள்விகளை எழுப்பினார். அதில்," கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் மதுரை உயர்நீதிமன்றத்தில் 550 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதில் பல அதிகாரிகள் மூன்று மாதங்கள் தாமதம் செய்கிறார்கள். மாவட்ட ஆட்சியர்கள் வருவாய் அலுவலர்கள் வட்டாட்சியர்கள் மூன்று ஆண்டுகள் கூட தாமதம் செய்கிறார்கள்.
அரசு அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற மாட்டோம் என்பதை கொள்கையாகவே வைத்துள்ளனரா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து," கல்வித் துறையில் பல நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா நீதிமன்ற உத்தரவுகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார். ஆனால் அந்த உத்தரவை எத்தனை அதிகாரிகள் நடைமுறைப்படுத்தினார்கள். அரசு உயர் அதிகாரிகள் சட்டத்திற்கு உட்பட்டவர்கள் தவறு செய்யும் அதிகாரிகளுக்கு எந்த ஆதரவும் அளிக்கப்பட மாட்டாது.
உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ஏன் நிறைவேற்ற மறுக்கிறீர்கள் என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினர். அப்போது உயர் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத மாவட்ட வருவாய் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பு உறுதி அளித்தது. இதை அடுத்து வழக்கின் நீதிமன்றத்தின் உத்தரவு நிறைவேற்ற தேவையான கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி வழக்கு விசாரணையை ஏப்ரல் இரண்டாம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications