வெறும் 4%.. மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு.. புறக்கணிக்கப்பட்ட தூங்கா நகரம்.. சோகத்தில் ஐடி ஊழியர்கள்!
மதுரை: மதுரையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கொண்டு வரப்பட்ட ரூ.36,660 கோடி முதலீடுகளில், மதுரை மாவட்டத்திற்கு வெறும் 4 சதவிகிதம் முதலீடுகள் மட்டுமே வந்திருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐடி துறையில் பெரியளவில் முதலீடுகள் ஈர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, சிப்காட்டில் ஒரேயொரு காலணி தயாரிப்பு மட்டுமே கொண்டு வரப்பட்டிருக்கிறது.
சென்னை, ஒசூர், தூத்துக்குடி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களை தொடர்ந்து மதுரையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்தது. அதற்கேற்ப Madurai Rising என்ற தலைப்பில் தொடர்ச்சியாக அமைச்சர் டிஆர்பி ராஜா பதிவுகளை வெளியிட்டு வந்தார். அதேபோல் நேற்று ரூ.36,660 கோடி முதலீடுகள் வரவுள்ளதாகவும், 91 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் மதுரையில் இன்று முதலீட்டாளர்கள் மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் மொத்தமாக ரூ.36,660 கோடி முதலீடுகள் வரவுள்ளதாகவும், 91 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகின. ஆனால் இந்த முதலீடுகளில் வெறும் 4 சதவிகிதம் மட்டுமே மதுரை மாவட்டத்திற்கான முதலீடுகளாக அமைந்துள்ளது.
மதுரைக்கான மிகப்பெரிய முதலீடாக பென் ஹாய் க்ரூப் தரப்பில் ரூ.720 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலொஅமாக தோல் அல்லாத காலணி உற்பத்தி செய்யப்பட உள்ளது. இதன் மூலமாக 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஐடி துறையை பொறுத்தவரை பெரிய அளவிலான முதலீடுகளே இல்லை என்று சொல்லலாம்.
மதுரையில் நடைபெற்ற முதலீட்டார்கள் மாநாட்டில் மதுரையில் ரூ.1,350 கோடி முதலீடுகளும், தேனி மாவட்டத்திற்கு ரூ.2,270 கோடி முதலீடுகளும் ஈர்க்கப்பட்டுள்ளன. சிவகங்கையில் ஒரேயொரு முதலீடும் ஈர்க்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து முதலீடுகளும் காஞ்சிரம், சென்னை, செங்கல்பட்டு, தஞ்சாவூர், தூத்துக்குடி, கடலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்றுள்ளது.
தூத்துக்குடிக்கு எச்டி ஹூண்டாய் நிறுவனம் தரப்பில் கப்பல் கப்பல் கட்டுமான தளத்தை அமைக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதனால் மதுரையை விடவும், தூத்துக்குடி அதிக தொழில் வளர்ச்சியை பெற்று வருவதாக பார்க்கப்படுகிறது. மதுரை மாவட்ட இளைஞர்களிடையே அதிக எதிர்பார்ப்பை பெற்ற செமி கண்டக்டர், ஐடி துறை முதலீடுகள் தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
கோவையில் செமி கண்டக்டர் துறை வளர்ச்சிக்கு தமிழக அரசு முனைப்பு காட்டி வரும் நிலையில், மதுரையில் ஐடி துறை வளர்ச்சிக்கே முனைப்பு காட்டாமல் இருப்பது இளைஞர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. மதுரைக்கு அதிகளவு முதலீடுகள் இல்லாத போது, தமிழக அரசு மதுரை முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தியது ஏன் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications