தங்கத்தை விட மீனாட்சி மனசு பெருசு சார்..தலையணையில் 25 பவுன் தங்கம்! அப்படியே கொடுத்த தூய்மைக் காவலர்

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது மகளின் திருமணத்திற்காக 25 சவரன் தங்க நகைகளை சேமித்து அதனை வீட்டில் உள்ள ஒரு தலையணையில் வைத்திருக்கிறார். எதிர்பாராத விதமாக வீட்டை சுத்தம் செய்த போது அந்த தலையணை குப்பைக்கு சென்ற நிலையில் அதனை அப்படியே மீட்டு கொடுத்திருக்கிறார்கள் தூய்மை பணியாளர்கள். தங்கத்தை விட தூய்மை காவலர்களின் தங்க மனது பெரிது என பாராட்டி வருகின்றனர் மதுரை மக்கள்.

மதுரை மாநகராட்சி 75 ஆவது வார்டுக்கு உட்பட்ட சுந்தரராஜபுரம் நியு ரைஸ்மில் 2வது தெரு பகுதியை சேர்ந்தவர் தங்கம். விவசாயி ஆன இவர்தனது மகளின் திருமணம் தை மாதம் நடைபெறவுள்ள நிலையில் அதற்காக தான் வைத்திருந்த 25 பவுன் நகையை தனது வீட்டில் இருந்த ஒரு சிறிய தலையணைக்குள் வைத்து பத்திரப்படுத்தி வைத்துள்ளார்.

இந்நிலையில் தனது மகளின் திருமணம் நடைபெறவுள்ள நிலையில் வீட்டை சுத்தம் செய்துள்ளனர் குடும்பத்தினர். அப்போது வீட்டில் இருந்து தலையணை, துணிகள் உள்ளிட்ட பழைய பொருட்களை மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை தொட்டியில் போட்டு சென்றுள்ளனர்.

Madurai sanitation worker gold

25 பவுன் நகை

இதையடுத்து இன்று காலை தலையணையில் 25 பவுன் தங்க நகையை வைத்திருந்தது நினைவுக்கு வந்த நிலையில், பதறியடித்து உடனடியாக அவரது வீட்டின் அருகே இருந்த குப்பை தொட்டியில் தேடியுள்ளார். ஆனால் தங்க நகை கிடைக்காத நிலையில் உடனடியாக 75 ஆவது வார்டு மேற்பார்வையாளர் மருதுபாண்டியனை தொடர்புகொண்டு தனது மகளின் திருமணத்திற்காக தலையணைக்குள் நகையை வைத்திருந்ததாகவும், அதனை ஞாபக மறதியில் குப்பை தொட்டிக்குள் வீசி சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளார்.

தூய்மை பணியாளர் நேர்மை

இதையடுத்து மேற்பார்வையாளர் அந்த பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களிடம் கூறியுள்ளார். அப்போது அங்கிருந்த மீனாட்சி என்ற தூய்மை பணியாளர் குப்பை தொட்டியில் தேடிப் பார்த்தபோது அங்கு குப்பை தொட்டிக்குள் தலையணை கிடப்பதை பார்த்து பின்னர் தலையணை பிரித்து பார்த்தபோது அதற்குள் 25 பவுன் நகை இருப்பது தெரியவந்துள்ளது.

தங்கம் மீட்பு

பின்னர் நகையின் உரிமையாளர் தங்கத்தை தொடர்புகொண்ட மேற்பார்வையாளர் மருதுபாண்டியன் மற்றும் தூய்மை பணியாளர் மீனாட்சி ஆகிய இருவரும் 25 பவுன் தங்க நகைகளை ஒப்படைத்துள்ளனர். இதனை பெற்றுக்கொண்ட நகை உரிமையாளர் தங்கம் தனது மகளின் திருமணத்திற்காக வாழ்நாள் முழுவதும் சம்பாதித்து சேர்த்து வைத்த 25 பவுன் நகையை மீட்டு தந்த மேற்பார்வையாளர் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். இந்தச் செய்தி சமூக வலைதளங்கள் மூலம் மதுரையில் பரவிய நிலையில் தூய்மை பணியாளர் மீனாட்சிக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

பொதுமக்கள் பாராட்டு

மேலும், மதுரையில் மாநகராட்சி குப்பை தொட்டியில் கிடந்த 25 பவுன் தங்க நகையை எடுத்து உரிமையாளரிடம் ஒப்படைத்த பெண் தூய்மை பணியாளர் மற்றும் மேற்பார்வையாளரின் தங்கமான செயலை பார்த்து நெகிழ்ச்சியடைந்து நேரில் சென்று பொதுமக்களும் பாராட்டுகளை தெரிவித்தனர். திருட்டு பயத்தால் தலையணைக்குள் வைக்கப்பட்டு குப்பைத் தொட்டிக்கு சென்ற தங்கம் பொட்டு குறையாமல் மீண்டும் வீட்டுக்கு வந்தது மதுரையில் பேசு பொருளாகியுள்ளது. அதே நேரத்தில் நேர்மையாக செயல்பட்ட தூய்மை பணியாளர்களுக்கும் மேற்பார்வையாளர்களுக்கும் பாராட்டும், உரிய அங்கீகாரமும் வழங்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+