திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை
மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தனி நீதிபதி என்ன உத்தரவு பிறப்பித்தார்? அந்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யுங்கள் என்று அரசு தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை வரும் ஏப்ரல் 8 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றக்கோரி இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என கடந்த டிசம்பர் மாதம் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை செயல்படுத்தாததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தமிழக தலைமை செயலாளர், கூடுதல் டி.ஜி.பி., மதுரை கலெக்டர், போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரிலும், காணொலியிலும் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
கடந்த 2 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, நேரில் ஆஜரான மதுரை ஆட்சியர் மன்னிப்பு கோரினார். திருப்பரங்குன்றத்தில் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுவதை தடுப்பதற்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நிர்வாக தேவை காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மற்றபடி, இந்த நீதிமன்றத்தின் உத்தரவுகளை நீர்த்துப்போக செய்ய வேண்டும் என்ற நோக்கம் எதுவும் இல்லை' என்று பதில் மனு தாக்கல் செய்தார்.
இதையடுத்து, கடந்த 4 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மலை உச்சியில் தீபத்தூண் பகுதியில் பூஜை நடத்துவது குறித்த முடிவை இரண்டு வாரங்களுக்குள் அரசு தரப்பு தெரிவிக்க வேண்டும் என்று கூறி வழக்கின் விசாரனையை நாளைக்கு ஒத்திவைத்து இருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதி சதீஷ்குமார் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் தனி நீதிபதி இவ்வாறு உத்தரவு பிறப்பித்து வருகிறார். எனவே, உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.
இதையடுத்து, தனி நீதிபதி என்ன உத்தரவு பிறப்பித்தார்? அந்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யுங்கள். இந்த பிரச்சனை இவ்வளவு பெரிதாவற்கு முன்பே முடித்து இருக்கலாமே என்று பல்வேறு கருத்துகளை முன்வைத்தனர். இதையடுத்து, தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஏப்ரல் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications