இவரு ஏன் இங்க இருக்காரு? அஜித் குமார் குடும்பத்திற்கு தமிழக அரசு செய்த உதவி.. அமைச்சருடன் நின்ற ஹரி நாடார்!
மதுரை: திருப்புவனம் காவல் நிலையத்தில் போலீசார் விசாரணையின் போது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலால் இளைஞர் அஜித் குமார் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அஜித் குமாரின் குடும்பத்தினருக்கு வீட்டு மனை மற்றும் சகோதரருக்கு அரசு வேலைக்கான சான்றிதழை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார். அமைச்சர் பெரியகருப்பன் அஜித் குமாரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கிய போது, ஹரி நாடார் உடனிருந்த சம்பவம் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளன.
2021 சட்டமன்றத் தேர்தலில் பனங்காட்டு படை கட்சி சார்பாக ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டு 3வது இடத்தை பிடித்தவர் ஹரி நாடார். கழுத்து நிறைய தங்க நகைகள், கைகளில் தங்க காப்பு, விரல்களில் மோதிரம் என்று வலம் வருவார். தற்போது எந்த நகையும் இல்லாமல் இளைஞர் அஜித் குமார் உயிரிழந்ததற்கு அரசு தரப்பில் இழப்பீடு கொடுக்கும் இடத்தில் ஹரி நாடார் உடனிருந்தது பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது.

அஜித் குமார் மரணம்
மடப்புரம் காளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், திருட்டு வழக்கின் விசாரணையின் போது போலீசார் கொடூரமான தாக்குதலா உயிரிழந்தார். அஜித் குமாருக்கு தண்ணீர் கூட கொடுக்காமல் வாயிலும், பிறப்புறுப்பிலும் மிளகாய் பொடியை போட்டு போலீசார் சரமாரியாக பைப்பை வைத்து அடித்திருக்கின்றனர்.
காவலர்கள் கைது
இதனால் அஜித் குமார் மயங்கிய நிலையில், அவரின் சிறுநீருடன் ரத்தமும் வெளியேறி இருக்கிறது. தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட போதே அஜித் குமார் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் அஜித் குமாரை கொடூரமாக தாக்கிய 5 காவலர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குடும்பத்தினர் கோரிக்கை
அதேபோல் பாதிக்கப்பட்ட அஜித் குமார் குடும்பத்தினரை அமைச்சர் பெரியகருப்பன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது முதல்வர் ஸ்டாலினும் தொலைபேசி மூலமாக மன்னிப்பு கேட்டு வருத்தம் தெரிவித்தார். அப்போது முதல்வர் ஸ்டாலினிடம், அஜித் குமாரின் சகோதரர் நவீன் குமார் நிரந்தர வேலைக்கான கோரிக்கை ஒன்றை முன் வைத்தார்.
அமைச்சருடன் இருந்த ஹரி நாடார்
அதனை ஏற்பாடு செய்வதாக முதல்வர் ஸ்டாலினும் உறுதிமொழி கொடுத்தார். இந்த நிலையில் இன்று காலை அமைச்சர் பெரியகருப்பன் அஜித் குமார் வீட்டிற்கு சென்று வீட்டு மனை, அஜித் குமார் சகோதரர் நவீன் குமாருக்கு அரசுப் பணிக்காக சான்றிதழ், திமுக சார்பாக ரூ.5 லட்சம் உதவித் தொகை ஆகியவற்றை வழங்கினார். அமைச்சர் பெரியகருப்பன் உடன், சத்திரிய சான்றோர் படை கட்சித் தலைவர் ஹரி நாடார் இருந்தார்.
அரசியல் தலைவர்களுடன் ஹரி நாடார்
அரசு தரப்பில் அளிக்கப்பட்ட உதவியை கொடுக்க ஹரி நாடார் ஏன் வந்தார் என்ற கேள்வி எழுந்தது. அப்போது மட்டுமல்லாமல் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் நேரில் சென்று அஜித் குமார் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த போது, ஹரி நாடார் காணப்பட்டார். திருமாவளவன் சென்று ஆறுதல் கூறிய போதும், ஹரி நாடார் உடனிருந்தார்.
குடும்பத்தினருடன் பேரம்
அதேபோல் மடப்புரம் பகுதியில் உள்ள நாடார் உறவின் முறை மண்டபத்தில் வைத்து அஜித் குமார் குடும்பத்தினருடன் பேரம் பேசப்பட்டது. ரூ.50 லட்சம் பணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி தருவதாக பேரம் பேசப்பட்டது. இதனை நீதிபதிகளே கண்டித்தனர். இந்த நிலையில் ஹரி நாடார் தொடர்ச்சியாக அஜித் குமார் வீட்டிலேயே இருப்பது பல்வேறு விமர்சனங்களை எழுப்பி இருக்கிறது.
விமர்சனங்கள்
அந்த வகையில் நாதக நிர்வாகி இடும்பாவனம் கார்த்தி தனது எக்ஸ் பக்கத்தில், அரசு வேலைக்கான உத்தரவை கொடுக்கிற இடத்தில் ஹரி நாடாருக்கு என்ன வேலை? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். இதேபோல் பலரும் சோசியல் மீடியாவில் அஜித் குமார் குடும்பத்தினருக்கும், ஹரி நாடாருக்கும் என்ன சம்பந்தம் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications