அரசு விழாவில் அசைவம்.. கறிவிருந்து வைத்து அசத்திய அமைச்சர் மூர்த்தி! மனசும் வயிறும் நிரம்பி போச்சு!
மதுரை: மதுரை மகளிர் கல்லூரியில் நடைபெற்ற மகளிர் சுய உதவி குழுக்கான கடன் வழங்கும் விழா தடபுடலாக நடைபெற்றது. நிகழ்வில் கடன் பெற வந்த மகளிருக்கு மட்டன் சிக்கன் பிரியாணி உடன் பிரம்மாண்ட விருந்து வைத்து அசத்தியிருக்கிறார் அமைச்சர் மூர்த்தி கடன் பெற்றதால் மனசு நிறைந்ததோடு வயிறும் நிறைந்ததாக நிகழ்ச்சியுடன் கூறினர் விழாவில் கலந்து கொண்ட பெண்கள்
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவி குழு தின விழாவை முன்னிட்டு மகளிருக்கான கடன் உதவி மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா இன்று மதுரை திருப்பாலை பகுதியில் இருக்கக் கூடிய மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பயனாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் என சுமார் 2000 பெண்கள் வருகை தந்தனர். அவர்களுக்கு தமிழ்நாடு பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அவருக்கே உரியதான மதுரை ஸ்டைலில் பிரம்மாண்ட விருந்து வைத்து அசத்தினார்.

காலையிலேயே வந்த மகளிர் உணவு அருந்தாமல் வீட்டுக்கு செல்ல கூடாது என்று உத்தரவிட்டதோடு, தனது குழுவினர் மூலம் பந்தல் அமைத்து தலை வாழை இலை போட்டு, மட்டன் பிரியாணி, சிக்கன் 65, குடல் கூட்டு, மட்டன் எண்ணெய் சுக்கா, கரண்டி ஆம்லெட், தயிர் பச்சடி, ஜிகர்தண்டா, ரசம், மோர், பீரணி என்று சொல்லக் கூடிய பாயசம் என மகளிர் கல்லூரியில் நடைபெற்ற மகளிர் சுய உதவி குழுவின் கடன் உதவி விழாவிற்கு வந்த மகளிருக்கு தனக்கே உரிய பாணியில் மெகா விருந்து வைத்தார் அமைச்சர் மூர்த்தி
கல்லூரி வளாகத்தில் பிரம்மாண்ட அடுப்பு சைவப் பிரியர்களுக்காக மொரு மொரு அப்பளம், சாம்பார், காய்கறி கூட்டு, ரசம் தயிர் என ஒருபுறம் என்றால், மறுபுறம் அண்டா அண்டாவாக மட்டன் பிரியாணி, சிக்கன் 65 என அசைவ ஐட்டங்களும் அங்கேயே சூடாக தயார் செய்யப்பட்டது. அண்ணே இது வைகாசி மாசம் நாங்க அசைவம் சாப்பிட மாட்டோம் என்று சொல்பவர்களுக்காக தனியாக சைவமும் தடபுடலாக தயார் செய்ய சைவத்திலும் அமர்ந்து பெண்கள் தங்களுக்கே உரிய பாணியில் ரசித்து ருசித்து சாப்பிட ஆரம்பித்தார்கள்.
எப்பா எல்லா நாளும் வீட்ல சாம்பார் ரசம் தான் இன்னைக்கு அசைவத்தை சாப்பிடுவோம் என்று சொல்லும் வகையில் அசைவ பக்கமே கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதிலும் முதியோர் உதவித் தொகையை வாங்க வந்த பயனாளிகள் மட்டன் பிரியாணியை ஒதுக்கி வைத்துவிட்டு தனது கைகளால் சிக்கனை பிதுக்கி பிதுக்கி சாப்பிட்டனர். மொத்தத்தில் மகளிர் சுய உதவி குழுவின் நிகழ்வில் வந்த மகளிருக்கு வயிறார ருசியாக அசைவ உணவை வழங்கினார் அமைச்சர் மூர்த்தி என பாராட்டி விட்டு சென்றனர்.
இப்போது மட்டுமல்ல மதுரையில் அமைச்சர் மூர்த்தியின் சார்பில் எந்த நிகழ்வு நடைபெற்றாலும் மதுரைக்கே உரித்தான ஸ்டைலில் விருந்து வைத்து அசத்துவார். கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரையில் திமுக பொதுக்குழு நடைபெற்ற நிலையில் மட்டன் பிரியாணி, மட்டன் சுக்கா, குடல் வறுவல் என அனைத்து அசைவ வகை உணவுகளுடன் விருந்து வைத்து திமுகவினரை குஷிப்படுத்தினார்.












Click it and Unblock the Notifications