வடிவேலு தாயார் மறைவு..நேரில் சென்ற மு.க.அழகிரி..அஞ்சலி செலுத்தி விட்டு ஆறுதல் கூறினார்
மதுரை: நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி 87, வயது முதிர்வு மற்றும் உடல்நல குறைவு காரணமாக நேற்றிரவு காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினரும், பொதுமக்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரி ஐராவதநல்லூரில் உள்ள வடிவேலுவின் வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு வடிவேலுவிற்கு ஆறுதல் கூறினார்.
நகைச்சுவை நடிகர் வடிவேலு தனது நகைச்சுவை மூலம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ள இவர் பல பிளாக்பஸ்டர் படங்களைக் கொடுத்துள்ளார். இன்றைக்கும் மீம் கண்டெண்ட் டெம்ப்ளேட்டுகளுக்கு கை கொடுப்பது வடிவேலுவின் போஸ்டர்கள்தான்.

டிவியில் நகைச்சுவை சேனல்களில் வடிவேலுவின் காமெடி இல்லாமல் இருக்காது. அரசியல் காரணங்களால் சில ஆண்டுகாலம் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கியிருந்தார் வடிவேலு. இறுதியாக சிவலிங்கா மற்றும் மெர்சல் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்த வடிவேலுவுக்கு, இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படப்பிடிப்பில் ஏற்பட்ட பிரச்னையால் தயாரிப்பாளர் சங்கம் அவருக்கு ரெட் கார்டு கொடுத்திருந்தது. இதனால் அவர் வேறு எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வடிவேலுவிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. இதையடுத்து இயக்குநர் சுராஜின் இயக்கத்தில் அவர் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடித்தார். இந்த படத்தைத் தொடர்ந்து சந்திரமுகி 2, மாமன்னன், விஜய் சேதுபதியுடன் ஒரு படம் எனப் பல்வேறு படங்கள் வடிவேலு நடிப்பில் உருவாகி வருகின்றன.
வடிவேலுவின் சொந்த ஊரான மதுரை ஐராவதநல்லூரில் வசித்து வந்த அவரது தாயார் சரோஜினி நேற்றிரவு உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 87. அவரது மறைவு வடிவேலு குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் மற்றும் சில அரசியல் தலைவர்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி விட்டு ஆறுதல் கூறி வருகின்றனர்.
வடிவேலு தாயாரின் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "நடிகர் வடிவேலு அவர்களின் அன்புத்தாயார் சரோஜினி அம்மாள் என்கிற பாப்பா அவர்கள் மதுரை விரகனூரில் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். ஆளாக்கி அழகு பார்த்த அன்னையின் மறைவு என்பது எந்த ஒரு மகனுக்கும் ஈடு செய்ய இயலாத இழப்பாகும். 'வைகைப் புயல்' வடிவேலு அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே வடிவேலுவின் தாயார் மறைவிற்கு முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரி நேரில் சென்று மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். வடிவேலு மீது தனி பாசம் கொண்டவர் மு.க அழகிரி. தாயார் மறைவினால் சோகத்தில் ஆழ்ந்திருக்கும் வடிவேலுவை நேரில் சந்தித்த மு.க அழகிரி ஆறுதல் கூறி தேற்றினார்.












Click it and Unblock the Notifications