‛‛முக அழகிரி விடுதலை’’.. தேர்தல் அதிகாரியை தாக்கிய வழக்கில் மதுரை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
மதுரை: 2011ல் நடந்த தமிழக சட்டசபை தேர்தலின்போது தாசில்தாரை தாக்கியதாக முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழக முதல்வர் முக ஸ்டாலினின் சகோதரருமான முக அழகிரிக்கு எதிரான வழக்கில் மதுரை நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. இதில் முக அழகிரி உள்பட 17 பேரையும் விடுதலை செய்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
தமிழக முதல்வரின் சகோதரர் முக அழகிரி. முன்னாள் மத்திய அமைச்சரான இவர் தற்போது அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்து வருகிறார். முன்னதாக கடந்த 2011ல் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது. அப்போது முக அழகிரி அரசியலில் மிகவும் ஆக்டிவ்வாக இருந்தார்.

இந்நிலையில் தான் 2011 ஏப்ரல் மாதம், சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்காக மதுரை மாவட்டம் மேலூர் அருகே முக அழகிரி பிரசாரம் செய்தார். இந்த சமயத்தில் கோவில் கதவு அடைக்கப்பட்டதோடு, தேர்தலில் வாக்காளர்களுக்கு மு.க.அழகிரி பண பட்டுவாடா செய்வதாக அதிமுகவினர் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து மேலூர் தேர்தல் அதிகாரியும் தாசில்தாருமான காளிமுத்து மற்றும் தேர்தல் அலுவலர்கள், கேமராமேனுடன் அங்கு சென்று வீடியோ எடுத்தனர். இதற்கு முக அழகிரி தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் முக அழகிரியின் ஆதரவாளர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தாசில்தார் காளிமுத்து சார்பில் கீழவளவு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
முக அழகிரி, அப்போதைய மதுரை துணை மேயர் மன்னன், திமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் என மொத்தம் 21 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு மதுரை மாவட்ட ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு முதல் வகுப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கில் ஜாமீன் கிடைத்ததால் முக அழகிரி வெளியே இருக்கிறார். இருப்பினும் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு கடந்த 13 ஆண்டுகளாக விசாரணை என்பது நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
முக அழகிரி உள்ளிட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தனர். வழக்கில் மொத்தம் 21 பேர் மீது குற்றம்சாட்டப்பட்ட நிலையில் தற்போது 17 பேர் மட்டுமே உள்ளனர். இவர்கள் தான் நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தனர். இந்நிலையில் தான் தற்போது வழக்கு விசாரணை என்பது முடிவடைந்தது. இதையடுத்து வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்தது.
இதையடுத்து இன்று முக அழகிரி உள்பட வழக்கில் தொடர்புடைய 17 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் முக அழகிரி உள்பட 17 பேரையும் விடுதலை செய்து மதுரை மாவட்ட ஜுடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் முக அழகிரி உள்பட வழக்கில் தொடர்புடைய 17 பேரும் நிம்மதியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications