மோடி 3.0 மக்களுக்கு ஏற்பட்ட வேதனை.. ஆனா 5 மாசத்துல தீர்ந்துடும்! ஈவிகேஎஸ் சொன்ன கணக்கு! ரஜினியா?
மதுரை: மூன்றாவது முறையாக மோடி பதவியேற்றது மக்களுக்கு ஏற்பட்ட வேதனை எனவும், அது இன்னும் 5 மாதத்தில் தீரும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும் ஈரோடு எம்.எல்.ஏ.வுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கட்சி நிர்வாகிகளின் இல்ல திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மதுரை வந்தடைந்தார்.

முன்னதாக மதுரை விருந்தினர்கள் மாளிகையில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில் "பிரதமர் மோடி தனது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை, பிரதமர் மோடி ஒரு நாடக நடிகரை போல செயல்படுகிறார்.
பிரதமர் மோடி பிரச்சாரத்தின் கடைசி 10 நாட்களில் பைத்தியக்காரரை போல பேசினார், பிரதமர் மோடி திருந்துவதற்கு வழியே இல்லை, பிரதமர் மோடியின் செயல்பாடுகளில் மாற்றம் இருக்காது, பிரதமர் மோடியை விட்டு நிதிஷ்குமாரும், சந்திரபாபு நாயுடுவும் பிரிந்து செல்வார்கள், நான் தான் எல்லாமே என மோடி செயல்பாட்டால் மோடி வீழ்த்தப்படுவார்.
தமிழிசை சௌந்தரராஜனின் தோல்வி அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாகி உள்ளது, மயிலாப்பூர் வங்கி மோசடி விவகாரத்தில் தமிழிசை சௌந்தரராஜன் குரல் கொடுக்கவில்லை, தமிழிசை சௌந்தரராஜன் தனக்கு புருஷன் வேண்டாம் அரசன் வந்தால் போதும் என நினைக்கிறார். கவுன்சிலராக நின்றால் கூட வெற்றி பெற முடியாத அண்ணாமலை கோவையில் நின்று தோல்வியை தழுவியுள்ளார்.
ஏந்த காலத்திலும் தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது, வட மாவட்டங்களில் பாமகவின் வாக்குகள் பாஜகவிற்கு கிடைத்ததால் தான் பாஜகவின் வாக்கு வங்கி உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் கூட்டணிக் கட்சிகளினால் தமிழகத்தில் பாஜகவிற்கு வாக்கு வங்கிகள் உயர்ந்துள்ளது. பாஜக தமிழகத்தில் எதிர்க்கட்சிகளாக நினைப்பது தன்னுடன் கூட்டணியில் உள்ள கூட்டணி கட்சிகளை தான், கூட்டணிக் கட்சிகளை ஒன்றும் இல்லாமல் செய்வதற்காக பாஜக செயல்படுகிறது.
பாஜக நாணயமான கட்சியாக செயல்படவில்லை, மோடியின் இழுபறியான வெற்றியின் காரணமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது எனக்கு நம்பிக்கை வந்துள்ளது. கடந்த கால வெற்றிகளை ஒப்பிடும் போது பாஜக தற்போது வெற்றியை தோல்வியாக எடுத்துக் கொள்ள வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உழைப்பிற்கு கிடைத்த வெற்றியாகும். மோடி, நிதிஷ்குமார், சந்ரபாபு நாயுடு ஆகியோர் கூட்டணி முரண்பாடான கூட்டணி, பணத்தை பங்கீடு செய்வதில் மூவருக்கும் முரண்பாடு வராது.
இந்திய கூட்டணிக்குள் தொகுதி தொடர்பாக சிறு சிறு பிரச்சனை இருந்தாலும் அடிப்படைக் கொள்கையான மதச்சார்பின்மையில் தெளிவாக உள்ளோம். தமிழிசை, எல்.முருகன் மாநில தலைவராக இருந்த காலகட்டத்தை விட தற்போது பாஜக வலுவிழந்து உள்ளது. காமராஜர் ஆட்சி போல மு.க.ஸ்டாலின் நல்ல ஆட்சியை தந்து கொண்டிருக்கிறார்.
மலைக்குச் சென்று வந்த பின்னர் ரஜினிகாந்த்திற்கு தெளிவு ஏற்பட்டிருக்கிறது. பிரதமர் மோடி மூன்றாம் முறையாக பதவி ஏற்பது இந்திய மக்களுக்கு ஏற்பட்ட வேதனை. அது இன்னும் 5 மாதத்தில் தீரும். இவிஎம் வாக்கு இயந்திரத்தில் நம்பிக்கை உள்ளது. முதல் 3 சுற்றுகளில் மோடி பின்னடைவை சந்தித்ததால் இவிஎம் வாக்கு இயந்திரத்தில் நம்பிக்கை உள்ளதாக கருதுகிறேன்" என கூறினார்.












Click it and Unblock the Notifications