பாஜக இருக்கும் வரை.. நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்காது.. ஓபனாக சொன்ன கார்த்தி சிதம்பரம்!
சிவகங்கை: மத்தியில் பாஜக அரசு இருக்கும் வரை நீட் தேர்வுக்கு விலக்கு வாங்க முடியாது என்று காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்தால், மாநிலங்களில் விலக்கு கொடுக்கலாம் என்று கூறிய கார்த்தி சிதம்பரம், நீட் தேர்வுக்கு எதிராக மற்ற மாநிலங்களும் குரல் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் காரைக்குடி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடிக்கு ஆதரவாக அக்கட்சியின் எம்பி கார்த்தி சிதம்பரம் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார். தனது எம்பி தொகுதிக்குள் வரும் மாவட்டம் என்பதால், கார்த்தி சிதம்பரம் தனது பிடியை இறுக்க தீவிரமாக இருக்கிறார். அதற்கேற்ப திமுக நிர்வாகிகளுடனும் கார்த்தி சிதம்பரம் அனுசரித்து செல்கிறார்.

சிவகங்கை மாவட்டத்திற்குள் வரும் தொகுதிகளில் கார்த்தி சிதம்பரத்தின் பிரச்சாரம் மக்களிடையே நன்றாக எடுபடுகிறது. இந்த நிலையில் மானாமதுரை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கார்த்தி சிதம்பரம் பேசுகையில், தமிழ்நாட்டில் நீட் தேர்வு வேண்டாம் என்பதே பரவலான கருத்து.
அதற்கு தமிழ்நாடு மட்டும் குரல் கொடுத்தால் போதாது. மற்ற மாநிலங்களும் குரல் கொடுக்க வேண்டும். மத்தியில் பாஜக அரசு இருக்கும் வரை நீட் தேர்வுக்கு விலக்கு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை இல்லை. ஆனால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மாநிலங்களுக்கு விலக்கு கொடுப்போம். தேவையென்றால் அந்த மாநிலங்கள் நடத்தி கொள்ளலாம். நீட் தேர்வு வேண்டுமா வேண்டாமா என்ற முடிவு மாநிலங்கள் கையில் இருக்கும்.
அதுதான் காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த சட்டம். அதனை பாஜக திருத்திவிட்டது. இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு மட்டும் 26 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மருத்துவர் ஆக வேண்டுமென்றால் வேறு வழியில்லை. அரசியல் காரணங்களுக்காக காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரும் வரை கனவை ஒதுக்கி வைத்துவிடு என்று சொல்லவா முடியும்.. அது ஒன்று தான் வழி..
அதனால் அரசு தரப்பில் நீட் பயிற்சி கொடுக்கிறார்கள். இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். கடந்த சட்டசபைத் தேர்தலின் போது திமுக தரப்பில் நீட் தேர்வு ரத்து வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதற்காக சட்டப் போராட்டம் நடத்தியது. தற்போது தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில் மீண்டும் நீட் விலக்கு கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications