கூட்டணி பற்றி எல்லாம் நாங்க பேசக்கூடாதுங்க.. எடப்பாடி மட்டும் தான் பேசுவார்.. செல்லூர் ராஜு பரபர!
மதுரை: கூட்டணி குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் சொல்வார், நான் அதைப்பற்றி எதுவும் சொல்ல மாட்டேன் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பழங்காநத்தத்தில் 22 லட்ச ரூபாய் மதிப்பில் நியாய விலைக்கடை மற்றும் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிக்காக நடைபெற்ற பூமி பூஜை விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சரும், மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவுமான செல்லூர் கே.ராஜு பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் கே.ராஜு, "மதுரையில் நடைபெற்று வரும் அம்ருத் குடிநீர் திட்டத்தை, முல்லை பெரியார் கூட்டு குடிநீர் திட்டத்தை முழுமையாக முடித்த பின்னரே மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அதிமுகவின் கனவு திட்டமான அம்ருத் திட்டத்தை அரைகுறையாகச் செயல்படுத்த கூடாது. அம்ருத் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க 25 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. பணம் வசூலிப்பது மாநகராட்சி நிர்வாகத்திற்கு தெரிந்து நடைபெறுகிறதா என தெரியவில்லை.
குடிநீர் இணைப்புக்கு பணம் வசூல் செய்வது குறித்து அமைச்சர் கே.என்.நேரு, மாநகராட்சி மேயர், ஆணையர் விசாரணை நடத்த வேண்டும். முழுமை பெற்றுள்ள மேல்நிலைத் தொட்டிகள் பம்பிங் மூலம் தண்ணீர் ஏற்றப்பட்டு வீடுகளுக்கு விநியோகம் செய்ய வேண்டும். அவசர கதியில் இந்த பணிகளை செய்யக்கூடாது. சாக்கடை கலப்பு இருக்கக்கூடாது. ஏழை எளிய மக்கள் பயன்பெறக்கூடிய இந்த திட்டத்தை சிறப்பாக செய்ய வேண்டும்" எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய செல்லூர் ராஜூ, "அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கூட்டணி தொடர்பாகவும் அரசியல் கருத்துகளையும் ஊடகத்தில் தெரிவிக்கக்கூடாது என கூறப்பட்டுள்ளது. மக்கள் பிரச்சனை, தொகுதி பிரச்சனைகளை மட்டுமே ஊடகத்தில் பேச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே நாடாளுமன்ற கூட்டணி குறித்தும், அரசியல் கருத்துகள் குறித்தும் பேசுவார். அதிமுகவின் நிலைப்பாட்டுக்கு ஊடகங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
பாஜக பற்றியும், கூட்டணி முடிவு பற்றியும் அதிமுகவினர் பொதுவெளியிலோ, ஊடகங்களிலோ பேசக்கூடாது என எடப்பாடி பழனிசாமி அதிமுக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியதாக தகவல் வெளியான நிலையில், அதை உறுதிப்படுத்தியுள்ளார் செல்லூர் ராஜூ. எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது, எங்களது தொண்டர்களின் உணர்வுகளை மதித்து தான் கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறினோம் எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications