திருப்பரங்குன்றம் விவகாரம்.. நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட 113 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு
மதுரை: திருப்பரங்குன்றத்தில் தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட 113 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருந்தார். இதனால், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமாக ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயிலில் நேற்று கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதுதொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், சிஐஎஸ்எப் வீரர்கள் உதவியுடன் தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார்.

ஆனால், திருப்பரங்குன்றம் கோயில் பகுதியில் நேற்று 144 தடை விதிக்கப்பட்டிருந்ததால் மனுதாரர் மலையேறுவதற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. இதனிடையே நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. ஆனால், அந்த மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து நேற்று மாலை நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மீண்டும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், "திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவை காரணம் காட்டியே மனுதாரரை தீபம் ஏற்ற போலீசார் அனுமதிக்காமல் இருந்துள்ளனர். எனவே, 144 உத்தரவை ரத்து செய்கிறேன்" என உத்தரவிட்டார். மேலும், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் உடனே தீபம் ஏற்ற உத்தரவிட்டடார்.
இதனால் திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் பாஜகவினரும், இந்து முன்னணியினரும் குவிந்தனர். பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மூத்த தலைவர் எச். ராஜா ஆகியோர் மலை ஏறுவதற்காக வந்தனர். ஆனால் அவர்களை போலீசார் மலை ஏற அனுமதிக்கவில்லை.
தீபம் ஏற்ற போலீசார் முழு ஒத்துழைப்பும், பாதுகாப்பும் வழங்க வேண்டும் என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்த போதும், தமிழக அரசு இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யவிருப்பதாக கூறி போலீசார் அனுமதி வழங்கவில்லை. தீபம் ஏற்ற அனுமதிக்க வலியுறுத்தி மலை அடிவாரத்தில் பாஜகவினரும் இந்து முன்னணியினரும் வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபட்டனர். மனுதாரரையாவது அனுமதியுங்கள் என்று கேட்டனர்.
தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹாவுடன் நயினார் நாகேந்திரனும் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உள்ளிட்டோரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர். அந்த பேருந்தை மறித்து பாஜகவினர் கோஷம் எழுப்பினர்.
இந்நிலையில் திருப்பரங்குன்றத்தில் தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உள்பட 93 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதன்படி சட்டவிரோதமாக அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்டது, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியது, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் அவர்கள் 93 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நயினார் நாகேந்திரனுடன் வந்த 93 பேர், இந்து மக்கள் கட்சி ஆலய பாதுகாப்பு குழு மற்றும் பாஜகவினர் என மொத்தம் 113 பேர் மீது போக்குவரத்துக்கு இடையூறு செய்தது, சட்டவிரோதமாக கூடியது, அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்டது என ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications