10 ரூபாய் டிஃபன்; 15 ரூபாய் சாப்பாடு! சேவை மணம் வீசும் மதுரை தம்பதி
மதுரை: பிபி சாலையைச் சேர்ந்த ஒரு தம்பதி ஏழை எளிய மக்கள் பலனடையும் வகையில் மலிவு விலையில் ஒரு உணவகத்தை நடத்தி பலரது கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் எத்தனையோ நகரங்கள் இருக்கின்றன. ஆனால், பலரும் பேச்சுவாக்கில் 'மதுரைக்காரர்கள் என்றாலே அவர்களுக்கு தனி மனசு' என்று சொல்வார்கள். அந்தளவுக்கு இந்த ஊருக்குப் பல பெருமைகள் உண்டு. இந்தத் தூங்கா நகரத்தில் இரவு 2 மணிக்குப் போனாலும் நல்ல உணவைச் சுடச்சுட சாப்பிட முடியும். மதுரை மல்லிப் பூ போல இட்லி நடு ராத்திரியில் இங்கே வாங்கி சாப்பிடலாம்.

உணவுக்குப் பெயர் போன மதுரைக்கு மேலும் ஒரு புதிய பெருமையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது ஒரு தம்பதி. மதுரையில் உள்ள பிபி குளம் பகுதியைச் சேர்ந்த அச்சதா மற்றும் உதயகுமார் தம்பதி, ஒரு சிறப்பான சேவையைச் செய்து வருகின்றனர். இவர்கள் வல்லமை அறக்கட்டளை மூலம் ஏழை எளியோருக்காக மலிவு விலை உணவகம் ஒன்றை நடத்தி வருகின்றனர்.
இங்கே ஒரு இட்லியின் விலை 2 ரூபாய்க்கும் அதேபோன்று ஒரு வடையின் விலை 2 ரூபாய்க்கும் விற்பனை செய்து வருகிறனர். சுவை குறையாத வெண் பொங்கல் 5 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கும் இந்த உணவகம் 9மணி வரை செயல்பட்டு வருகிறது. இங்கே யாருக்கும் பார்சல் உணவு வழங்கப்படுவதில்லை. நேரில் வந்து உண்பவர்களுக்கு மட்டுமே உணவு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

குறைந்த பட்சமாக 7 ரூபாய் இருந்தால் வயிறு நிறைய காலை உணவை முடித்துவிடலாம். மதியம் சாப்பாடாக வெரைடி சாதமும் அதனுடன் ஒரு முட்டையும் சேர்த்து 15 ரூபாய்க்கு வழங்குகிறார்கள். இந்தத் தம்பதி இவ்வளவு சீப் அண்டு பெஸ்ட் ஆக உணவுகளை வழங்குவதால், காலை மற்றும் மதியம் என்று கூட்டம் அலைமோதுகிறது. நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கூட இங்கே வாடிக்கையாளராக இருந்து உணவை ருசித்துச் செல்கின்றனர்.
காலை 8 மணிக்கு உணவுகள் தயாராவதற்கு முன்பே மக்கள் வரிசையில் நின்று வாங்கி சாப்பிட்டுச் செல்கின்றனர். சொந்த நிலத்தில் விளையும் காய்கறிகளை வைத்து இந்த உணவகம் நடத்தப்படுவதால், நல்ல தரமான உணவுடன் ஆரோக்கியமும் சேர்ந்து பரிமாறப்பட்டு வருகிறது.

இந்தத் தம்பதியின் மகன் விஜய் ஸ்வரூப் ஒரு ஐஏஎஸ் அதிகாரி. அவர் கொல்கத்தாவில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரம்யா பாரதி, டெல்லியில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
இந்தச் சேவை உணவகம் பற்றி பேசிய அச்சதா, "நாங்கள் பல காலமாகவே ஆதரவற்றவர்கள், முதியோர்கள் என்று பலருக்கும் உதவிகளைச் செய்து வருகிறோம். நிறைய ஏழை குழந்தைகளின் கல்விக்கு உதவிகள் செய்து வருகிறோம். அப்படித் தொடர்ந்து உதவி செய்து வரும்போதுதான் ஒருநாள் திடீரென்று இந்த மாதிரி மலிவு விலையில் தரமான உணவை மக்களுக்குத் தர வேண்டும் என நினைத்தேன். வந்து சாப்பிடுபவர்களுக்கு மட்டும்தான் இங்கே உணவு தருகிறோம். பார்சல் எல்லாம் தருவதில்லை.
இதே பகுதியில் வாட்ச் மேனாக வேலை பார்த்து வரும் சாந்தாராம், இங்கே இரண்டு வேளை உணவை 20 ரூபாய்க்குள் தினமும் முடித்துவிடுவதாகச் சொல்கிறார். உழவர் சந்தையில் பணி செய்து வரும் முத்துபாண்டி, குறைந்த விலையில் தரமான உணவு கிடைப்பதாகச் சொல்கிறார்.

குறைந்தது காலையில் 30 பேருக்கு மேல் உணவருந்த வருகிறார்கள். மதியம் 50 பேருக்கு மேல் வருகிறார்கள். கூட்டம் அதிகமானால் சுவையில் மாற்றம் ஏற்படும் என்பதால் சரியாகப் பார்த்து உணவை வீணாக்காமல் விநியோகிக்கிறார்கள். ஏதோ மலிவு விலை கடை என்பதால் சுகாதாரமற்று இருக்கும் என யாரும் நினைத்துவிடக் கூடாது.
கிட்டத்தட்டத் தரமான உயர்தர சைவ உணவகத்திற்கு இணையாகச் சுத்தமாக உள்ளது இந்தக் கடை. வேலை செய்யும் பணியாளர்கள் சுத்தமாக அதை விநியோகிக்கிறார்கள். கையில் உறை, தலையில் தொப்பி எனச் சுகாதாரக் கேடு இல்லாமல் உள்ளது இந்த இடம்.
ஆகவே, வருபவர்கள் விரும்பி, அமர்ந்து உணவை உண்டுவிட்டுச் செல்கின்றன. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தொடங்கி பலதரப்பட்ட மக்கள் இதன் வாடிக்கையாளராக இருந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications