கள் இறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது ஏன்? ஐகோர்ட் கிளையில் தமிழக அரசு சொன்ன தகவல்!
மதுரை: "கள் இறக்க தடை விதித்திருப்பது அரசின் கொள்கை முடிவு. கள்ளில் கலப்படத்தால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது" என தமிழக அரசு தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கள் இறக்குவதற்கான தடையை விலக்கக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது.
தூத்துக்குடி மில்லர்புரத்தைச் சேர்ந்த ஆறுமுகம், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாட்டில் கள் இறக்கவும், விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையால் பனை மரம் வளர்ப்போர் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். கள்ளுக்கான தடையை விலக்கக்கோரி ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது அரசு தரப்பில் கள்ளில் போதைக்காக பல வேதிப்பொருட்கள் கலக்கப்படுவதால் தடை விதிக்கப்பட்டுள்ளது. கள் உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

கள் போதைப்பொருள் அல்ல. உடலுக்கு நல்லது. மத்திய உணவு பாதுகாப்பு சட்டப்படி, கள் பாதுகாப்பான உணவுப்பொருள் என்ற வகைப்பாட்டில் இடம் பெற்றுள்ளது. கள் இயற்கையான பானம். உடலுக்கு தீங்கு விளைவிக்காது. ஆனால், தமிழக மதுவிலக்கு சட்டப்பிரிவு, கள் இறக்குவது, விற்பனை செய்வது, இருப்பு வைப்பதை தடை செய்கிறது. மத்திய அரசின் சட்டத்திற்கு முரணாக, மாநில அரசின் சட்டப்பிரிவு உள்ளது. அதை சட்டவிரோதம் என, அறிவிக்க வேண்டும்.
பீர் உட்பட பல்வேறு வெளிநாட்டு மதுபானங்கள் டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படுகின்றன. வெளிநாட்டு மதுபானங்களின் விற்பனையை பெருக்குவதற்காகவே கள்ளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு மதுபானங்களை விட கள்ளில் குறைவாகவே போதை உள்ளது.
எனவே கள் விற்பனைக்கு நிபந்தனைகளை உருவாக்கி, அதன்படி அனுமதிக்க வேண்டும். இதனால், அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். கள் இறக்க மற்றும் விற்பனைக்கான தடையை நீக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். கள் இறக்கவும், விற்கவும் அனுமதி வழங்கவும், தனிப்பயன்பாடு மற்றும் மருத்துவ பயன்பாட்டிற்காக பனை மரங்களில் இருந்து கள் இறக்கவும், விற்கவும் அனுமதி வழங்குமாறும் உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், எம்.ஜோதிராமன் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் மகாராஜன் ஆஜராகி, "கள் இறக்க தடை விதித்திருப்பது அரசின் கொள்கை முடிவு. கள்ளில் கலப்படத்தால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது" என்று கூறி அரசின் பதில் மனுவை தாக்கல் செய்தார். இதையடுத்து இந்த மனு மீதான விசாரணையை ஜூன் 7 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications