Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மக்கள் சக்தியால் டங்ஸ்டன் திட்டம் ரத்து..தொடக்கம் முதலே தமிழக அரசு எதிர்த்தது.. மு.க.ஸ்டாலின் பேச்சு

Subscribe to Oneindia Tamil

மதுரை: மக்கள் சக்தியால் டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் ரத்து செய்யப்பட்டதாக முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் கொண்டு வரப்பட்டதற்கான முதன்மை காரணம் பாஜக தான் என்றும், அதற்கு துணையாக அதிமுக இருந்ததாகவும் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்திற்கு உட்பட்ட அரிட்டாப்பட்டி கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் 2,015.51 ஹெக்டேர் பரப்பளவில் டங்ஸ்டன் கனிமத்தை வெட்டி எடுக்க சுரங்கம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கான உரிமையை வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் கைப்பற்றியிருந்தது. இந்த அறிவிப்பு கடந்த ஆண்டு நவ.7ல் வெளியாகியது.

tungsten mining project madurai mk stalin

இதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் தொடர்ச்சி போராட்டம் நடத்தி வந்தனர். அதேபோல் தமிழக அரசு தரப்பில், சட்டப்பேரவையில் டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் 3 நாட்களுக்கு முன் டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு அரிட்டாபட்டி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அப்போது மக்கள் தரப்பில் டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ததற்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று அரிட்டாபட்டியைச் சேர்ந்த 32 விவசாயிகள் அமைச்சர் மூர்த்தி தலைமையில் சென்னை சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி கூறினர்.

அப்போது விவசாயிகள் தரப்பில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் ரத்து செய்ய அழுத்தம் கொடுக்க தமிழக அரசு மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்த திட்டமிட்டு, அதற்கான அழைப்பும் விடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி வந்தார். கிராமத்தின் தொடக்கத்தில் இருந்து மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் பேசுகையில், டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து செய்யப்பட்டதாக மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது, அனைத்து கட்சிகளும் ஆதரவு அளித்தன. அப்போது நான், மக்களால் ஆட்சியில் இருக்கும் நான், முதலமைச்சர் பொறுப்பில் இருக்கும் வரை டங்ஸ்டன் திட்டம் வராது என்று கூறினேன்.

ஒருவேளை டங்ஸ்டன் திட்டம் வந்தால், நான் பதவியில் இருக்க மாட்டேன் என்றும் தெரிவித்தேன். இதற்காக என்னை சந்தித்த கிராமத்தின் பெரியவர்கள் எல்லோரும், பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் எனக்கு பாராட்டு சொல்வதை விடவும், உங்களுக்கு தான் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவிக்க வேண்டும்.

நீங்கள், நாங்கள் என்று பேசுவதை விடவும், நமக்கு வெற்றி கிடைத்துள்ளது. அதுதான் உண்மை. என்றும் நாங்கள் உங்களுக்கு துணையாக இருப்போம். மீண்டும் உங்களை சந்திக்க வருவோம். இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் தேர்தல் வரப் போகிறது. அந்த தேர்தலில் நீங்கள் என்ன முடிவுடன் இருக்கிறீர்கள் என்பதும் தெரியும். உங்களுக்காக நாங்களும், எங்களுக்காக நீங்களும் இருக்கிறீர்கள் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வல்லாளப்பட்டியில் நடைபெற்ற பாராட்டு விழாவிலும் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது, மக்களின் அன்பு கட்டளையை ஏற்று இங்கு வந்துள்ளேன். உங்களுக்காக நடக்கும் பாராட்டு விழா என்று தான் இதனை பார்க்கிறேன். மத்திய பாஜக அரசு மக்களுக்கு விரோதமான செயல்களை தொடர்ந்து செய்து வருகிறது.

இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து டெல்லியை நோக்கி விவசாயிகள் பேரணியை நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே இதேபோன்ற விவசாயிகள் போராட்டம் 2 ஆண்டுகள் நடைபெற்றது. ஆனால் டங்ஸ்டன் போராட்டம் 3 மாதங்களில் முடிவுக்கு வந்துள்ளது. டங்ஸ்டன் திட்டத்திற்கு முதன்மை காரணம், நாடாளுமன்றத்தில் பாஜக அரசால் கொண்டு வரப்பட்ட சட்டம் தான்.

அந்த சட்டத்தை திமுக கூட்டணி கட்சிகள் ஒன்று சேர்ந்து எதிர்த்தது. ஆனால் எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக, அந்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தது. மாநிலங்களவையில் உறுப்பினராக உள்ள தம்பிதுரை, சட்டத்தை ஆதரித்து பேசினார். இதுதான் டங்ஸ்டன் பிரச்சனைக்கு தொடக்கப் புள்ளியாக அமைந்தது. ஆனால் டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடக்கத்திலேயே 2 முறை கடிதம் எழுதி இருக்கிறோம்.

ஆனால் தமிழக அரசின் கடிதத்தையும் மீறி பாஜக அரசு ஏலம் விடுவதற்கான நடைமுறையை மேற்கொண்டனர். ஆனால் டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தியும் இருந்தார். பின்னர் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தோம். அப்போது டங்ஸ்டன் திட்டம் வந்தால் பதவியில் இருக்க மாட்டேன் என்று கூறினேன். எனக்கு பதவி பற்றிய கவலையில்லை. அதேபோல் அந்த தீர்மானத்திற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன என்று தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+