மதுரை மாநாட்டில் விஜய் மட்டுமே பேசுவார்.. 42 கேள்விகளுக்கு தவெக பதில்.. காவல்துறை நிபந்தனைகள் என்ன?
மதுரை: தமிழக வெற்றிக் கழகம் சார்பாக ஆகஸ்ட் 21ஆம் தேதி நடத்தப்பட உள்ள 2வது மாநில மாநாட்டில் விஜய் மட்டுமே பேச உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. சிறப்பு விருந்தினர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்பட்டுள்ள நிலையில், கர்ப்பிணிகள் பங்கேற்க அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் சார்பாக ஆகஸ்ட் 21ஆம் தேதி மதுரையில் மாநாடு நடத்தப்பட உள்ளது. முதலில் ஆகஸ்ட் 25ஆம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், காவல்துறை சார்பாக ஆகஸ்ட் 18 முதல் ஆகஸ்ட் 22 வரை ஒரு தேதியைத் தேர்வு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆகஸ்ட் 27ல் விநாயகர் சதுர்த்தி விழா இருப்பதால், பாதுகாப்பு சிக்கல் ஏற்படாமல் இருக்க தவெக தரப்பிடம் கேட்கப்பட்டது.

இதனை ஏற்றுக் கொண்ட தவெக தலைவர் விஜய், ஆகஸ்ட் 21ஆம் தேதி மாநாட்டை நடத்த முடிவு செய்து அறிவித்தார். இதன்பின் மதுரை பாரபத்தி பகுதியில் 500 ஏக்கர் பரப்பளவில் நிலம் ஒப்பந்தம் செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநாட்டுத் திடலை சுத்தம் செய்யும் பணிகள் ஒரு பக்கம் நடந்து வரும் நிலையில், இன்னொரு பக்கம் மாநாட்டின் அரங்கம் தயார் நிலையில் உள்ளது.
விக்கிரவாண்டி மாநாட்டைப் போலவே இந்த மாநாட்டில் விஜய் ரேம்ப் வாக் செல்ல சுமார் ஒரு கிமீ தூரத்திற்கு நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக மாநாட்டுக்கு வந்த தொண்டர்கள் விஜயை அருகில் நின்று பார்க்க முடியும். இந்த நிலையில் தவெக மாநாட்டையொட்டி காவல்துறை தரப்பில் கேட்கப்பட்ட 42 கேள்விகளுக்குப் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தவெக மாநாட்டுக்காக 200 அடி நீளவும், 60 அடி அகலமும் கொண்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது. தவெக தலைவர் விஜய் நடந்து சென்று தொண்டர்களை பார்ப்பதற்காக 800 அடி தூரத்திற்கு நடைமேடை அமைக்கப்படுகிறது. இந்த மாநாடு மாலை 3.15 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும். இந்த மாநாட்டில் 1.20 லட்சம் ஆண்கள், 25 ஆயிரம் பெண்கள், 4,500 முதியவர்கள், 500 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
அதேபோல் குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு அனுமதி இல்லை. தமிழ்நாடு முழுவதும் இருந்து தொண்டர்கள் வர உள்ளதாகவும், மாவட்டத்திற்கு தலா 3,600 பேர் வேன்கள், பேருந்துகள், கார்கள், இருசக்கர வாகனங்களில் வரவுள்ளனர். இதற்காக மொத்தமாக 1.5 லட்சம் நாற்காலிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர்களுக்காக 100க்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீர் தொட்டிகள் வசதி செய்யப்பட்டுள்ளது.
400 தற்காலிக கழிப்பறைகள், 50க்கும் மேற்பட்ட எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. சிசிடிவி கேமராக்களும், 420 ஒலி பெருக்கிகளும், 20 ஆயிரம் மின் விளக்குகளும் பொருத்தப்பட உள்ளன. மாநாட்டில் கலந்து கொள்ளும் தொண்டர்களுக்கு பாஸ் வழங்கப்படவில்லை. மாநாட்டிற்கு வருவதற்கும், வெளியேறுவதற்கும் மொத்தமாக 18 வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமல்லாமல் மருத்துவக் குழு மற்றும் ஆம்புலன்ஸ் வசதி கோரி சுகாதாரத்துறையிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தனியார் மருத்துவர்கள் மற்று உபகரணங்கள் வரவழைக்கப்பட்டு மாநாட்டுப் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கு வாகனங்கள் செல்ல 12 அவசரக் கால வழித்தடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த மாநாட்டின் நிகழ்ச்சி நிரலாகக் கொடி ஏற்றுதல், தமிழ்த்தாய் வாழ்த்து, உறுதிமொழி, கொள்கை பாடல், தீர்மானம், விஜய் உரை, நன்றி உரையுடன் மாநாடு முடிவடைய உள்ளது. இந்த மாநாட்டில் விஜய் தவிர்த்து வேறு முக்கிய நபர்கள் கலந்து கொள்ளவில்லை. விஜய் மட்டுமே பேச உள்ளார். அதேபோல் மதுரை விமான நிலையம் முதல் மாநாடு திடல் வரை அவருக்கு எந்த வரவேற்பும் அளிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications