அவரு Normal People இல்லங்க.. விஜயை பொத்திப் பொத்திப் பாதுகாக்கும் நிர்வாகிகள்? ரகசியமாக மதுரை வருகை?
மதுரை: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஆன விஜய் நாளை மதுரையில் கட்சியின் இரண்டாவது மாநில மாநாட்டை நடத்துகிறார். இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பே ரகசியமாக விஜய் மதுரைக்கு வந்ததாக ஒரு தகவல் உலாவுகிறது. அதே நேரத்தில் விஜய் இன்னும் சென்னையில்தான் இருக்கிறார் எனவும், ஒரு தரப்பினர் சொல்கின்றனர். ரோட்ஷோ நடத்தக் கூடாது என காவல்துறை அறிவுறுத்தியிருக்கும் நிலையில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவே விஜய் முன்னரே மதுரைக்கு வந்து விட்டதாகவும் சொல்கின்றனர்.
நடிகராக இருந்து அரசியல்வாதியாக அவதாரம் எடுத்திருக்கிறார் நடிகர் விஜய் நாளைய தீர்ப்பில் தொடங்கிய அவரது திரைப்பயணம் மதுரை மாநாடு வரை வந்திருக்கிறது. தனது கடைசி படமான ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும் விஜய் அடுத்ததாக தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
மண்டல வாரியாக மாநாடுகள், தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் என வரும் வருடம் விஜய் மிகவும் பிசியாக இருப்பார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். அதே நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர மாட்டிக்கிறார் என்ற குற்றச்சாட்டும் அவர் மீது இருக்கிறது.

நடிகர் விஜய்
கடந்த ஒன்றரை ஆண்டுகளில் விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு மக்கள் பிரச்சனைக்காக வெளியே வந்தது இரண்டு முறை தான். ஒன்று பறந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவினரை சந்தித்தது, அதற்குப் பிறகு சிவகங்கை அஜித்குமார் காவல் மரணத்தை கண்டித்து சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மட்டும்தான். பிற நிகழ்வுகளில் பாதிக்கப்பட்ட மக்களை பனையூருக்கு வரவழைத்து விஜய் சந்தித்து பேசியதுதான் அதிகபட்ச அரசியலாக இருக்கிறது. விஜய் வெளியே வந்தால் அதிக அளவில் கூட்ட நெரிசல் ஏற்படும், போக்குவரத்து இடையூறு ஏற்படும் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என ஒவ்வொரு நிகழ்வுக்கும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் விளக்கம் தருகின்றன.
தவெக மதுரை மாநாடு
ஆனால் வெளியே வந்தால் பிரச்சனை வரும் என கருதுபவர்கள் எதிர்க்க அரசியலுக்கு வருகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த நிலையில் நாளை மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் கடந்த ஒரு மாதமாகவே தீவிரமாக நடைபெற்று வருகிறது பல்வேறு கட்டுப்பாடுகளுடன் காவல் துறை அனுமதி அளித்திருக்கிறது.
விஜய் ரோட்ஷோ
குறிப்பாக மாநாட்டுக்கு இருசக்கர வாகனத்தில் வரக்கூடாது, விமான நிலையத்திலிருந்து மாநாடு நடைபெறும் இடத்துக்கு செல்லும் வரை விஜய் ரோட்ஷோ நடத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. இப்படி கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் விஜய் இரண்டு நாட்களுக்கு முன்பே மதுரைக்கு வந்து விட்டார் என்ற ஒரு தகவல் உலாவுகிறது. மதுரையில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் தங்கிருந்து மாநாட்டு பணிகளை கண்காணித்து வருவதாகவும், ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு சில ஆலோசனைகளை விஜய் வழங்கியதாகவும் சொல்லப்படுகிறது.
விஜய் எங்கே இருக்கிறார்?
விஜய் வரும் தகவலை கேட்டால் விமான நிலையத்திலேயே அதிக அளவில் கூட்டம் கூடும். இதனால் பிரச்சனை எழலாம் என்பதாலேயே விஜய் முன்னரே மதுரைக்கு வந்து விட்டார் என்கின்றனர்.
மேலும் நட்சத்திர விடுதியில் இருந்து மாநாட்டுக்கு விஜய் ரகசியமாகவே செல்வார் எனவும், முன்னதாகவே அங்கு சென்று விட்டு நிகழ்ச்சியின் போது மட்டும் மேடையில் தோன்றுவார் எனவும் சொல்லப்படுகிறது.
விஜய் மதுரை வருகை
இந்த நிலையில் விஜய் சென்னையில் தான் இருக்கிறார். நாளை மதியம் தான் தனி விமானத்தில் மதுரை வருகிறார். அங்கிருந்து நட்சத்திர விடுதிக்கு சென்று ஓய்வெடுத்து விட்டு மாநாட்டுக்கு விஜய் வருவார். நிச்சயம் செல்லும் வழியில் மக்களை சந்திப்பார் என அடித்துச் சொல்கின்றனர் தமிழக வெற்றிக் கழகத்தினர். உண்மையில் விஜய் மதுரையில் இருக்கிறாரா? அல்லது சென்னையில் இருக்கிறாரா? என்பதே சில நிர்வாகிகளுக்கு தெரியவில்லை என்ற தகவலும் உலாவுகிறது.












Click it and Unblock the Notifications