எடப்பாடியின் “ராஜ தந்திரம்”.. மதுரை மாநாட்டில் ஓபிஎஸ் பற்றி ஒரு வார்த்தைகூட பேசலையே - காரணமே வேறயாம்
மதுரை: மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஏன் தெரியுமா?
மதுரை அதிமுக மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி புரட்சித் தமிழர் என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து அவர் பேசுகையில், " மதுரை மண் ராசியான மண், இங்கே தொடங்கியது எல்லாம் வெற்றிதான். முதல் மாநாட்டை இங்கே நடத்துவது மகிழ்ச்சியளிக்கிறது. எம்ஜிஆர் கொடுத்து கொடுத்து சிவந்த கரத்திற்கு சொந்தக்காரர்.

அவர் உருவாக்கிய அதிமுகவே தமிழ்நாட்டில் மிகப்பெரிய கட்சி. இது அதிமுகவின் பொன்விழா ஆண்டாகும். 51 ஆண்டில் 31 ஆண்டுகள் நாம் ஆட்சி செய்து இருக்கிறோம். எடப்பாடி பழனிசாமி என்னும் நான் உழைப்பால் உயர்ந்தவன். சாதாரண தொண்டராக இருந்தவன். விவசாயியாக செய்து வந்தேன்.
இங்கே இருக்கும் ஒவ்வொரு தொண்டர்களும் உழைப்பாளர்கள். அதிமுக தொண்டன் என்று சொன்னாலே பெருமை. நான் முதலமைச்சராக் 4 ஆண்டுகள் 2 மாதங்கள் ஆட்சி செய்தேன். கொரோனா பற்றி தெரியாத போதும் அதை தடுத்தோம்.காவிரி பிரச்சனையை தீர்த்து வைத்தது அதிமுகதான். நமது ஆட்சியில்தான் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. கடந்த அதிமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் திறந்தோம்.
தொண்டராக இருப்பவர் அதிமுக பொதுச்செயலாளர் ஆகலாம். நான் ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவன். இந்த மாநாடு 15 லட்சம் தொண்டர்கள் பங்கேற்று சரித்திர சாதனை படைத்து உள்ளது. இதுவரை எந்த மாநாட்டுக்கும் இவ்வளவு கூட்டம் வந்தது கிடையாது. இந்த அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு சரித்திர சாதனையை படைத்து இருக்கிறது." என்று அவர் தெரிவித்தார்.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம், சசிகலா - தினகரன் இடையே மோதல்கள் வெடித்து கட்சி பல துண்டுகளாக சிதறியது. இந்த நிலையில் பல்வேறு சட்டப் போராட்டங்களுக்கு பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். ஆனாலும், ஓ பன்னீர்செல்வத்தின் செல்வாக்கு உள்ள தென் மாவட்டங்களில் எடப்பாடிக்கு செல்வாக்கு இல்லை என்ற பேச்சு நீடித்தது.
2024 மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இதனை மாற்றி தென் மாவட்டங்களிலும் தன்னுடைய பலத்தை காட்ட நினைத்தார் எடப்பாடி பழனிசாமி. அதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுதான் இன்று மதுரையில் நடைபெற்ற அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு. மதுரை வலையங்குளத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் அதிமுக பல்வேறு முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளது. முந்தைய அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சாதனைகளையும், ஆளும் திமுக அரசு மீதான விமர்சனங்களையும் எடப்பாடி பழனிசாமி அடுக்கினார். ஆனால், அவர் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் குறித்தோ, சசிகலா, தினகரன் பற்றியோ ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
தென் மாவட்டங்களில் ஓ பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் சார்ந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் இருப்பதால், இவர்களை விமர்சித்து பேசினால் அந்த மக்களின் அதிருப்தியை சந்திக்க நேரிடலாம். அது நடந்தால் இவ்வளவு பெரிய மாநாட்டை கூட்டியதே பயனற்றதாகிவிடும் என்று எண்ணத்தில் எடப்பாடி பழனிசாமி அவர்களை விமர்சிக்காமல் கடந்து சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications