ஆசையாய் கல்யாணம்.. திடீரென சேர்ந்த வாழ மறுத்த காதலன்.. வீட்டு வாசலிலேயே உயிரை விட்ட மனைவி
மதுரை அருகே சேர்ந்து வாழ மறுத்த காதல் கணவன் வீட்டு முன்பு மனைவி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை: மதுரை அருகே சேர்ந்து வாழ மறுத்த காதல் கணவன் வீட்டு முன்பு மனைவி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆசை ஆசையாய் காதலித்து திருமணம் செய்த கணவன் திடீரென வாழ மறுத்ததால் அவரது வீட்டு வாசலிலேயே உயிரை விட்டிருக்கிறார் மனைவி.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அண்ணாநகர் பகுதியில் வசித்து வருபவர் பாண்டியராஜா, இவர் சமையலராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் பாண்டீஸ்வரி வயது 21. இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமங்கலம் என்.ஜி.ஓ.நகரை சேர்ந்த நவீன்பிரகாஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்கள் காதலுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால் இவர்களது காதல் திருமணத்தை இரண்டு குடும்பத்தாரும் உடனே ஏற்கவில்லை. இதனால் இருவரும் தனியாகவே வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு பாண்டியராஜா மகளையும், மருமகனையும் தனது வீட்டு மாடியிலேயே குடிவைத்தார். பாண்டீஸ்வரி, நவீன்பிரகாஷ் தம்பதி அங்கேயே வசித்து வந்தனர்.

நீதிமன்றத்தில் முறையீடு
இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தாய் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி சென்ற நவீன் பிரகாஷ் அதன் பிறகு பாண்டீஸ்வரியின் வீடு திரும்பவில்லை. மேலும் பாண்டீஸ்வரி தன்னை துன்புறுத்துவதாக திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரும் கொடுத்தனர். இரு தரப்பினரையும் அழைத்து போலீசார் விசாரித்தபோது நீதிமன்றம் சென்று பிரச்சினையை தீர்த்து கொள்வதென முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

காதலன் வீடு
காதலித்து திருமணம் செய்த பாண்டீஸ்வரி, தன் ஆசை கணவன் சேர்ந்து வாழ விரும்பாததால் விரக்தி அடைந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று பாண்டீஸ்வரி, கணவர் நவீன்பிரகாஷ் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு தன் கணவரை தன்னோடு அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளார். நவீனின் பெற்றோரோ, நவீன் வெளியூருக்கு சென்றுவிட்டதாக கூறியிருக்கிறார்கள்.

மனைவி தற்கொலை
இதனால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாண்டீஸ்வரி, விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து தகவல் அறிந்த போலீசார் பாண்டீஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருமங்கலத்தில் பரபரப்பு
இதுகுறித்து பாண்டீஸ்வரியின் தந்தை பாண்டியராஜா அளித்த புகாரின் பேரில் திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். . ஆசை ஆசையாய் காதலித்து திருமணம் செய்த கணவன் திடீரென வாழ மறுத்ததால் அவரது வீட்டு வாசலிலேயே மனைவி விஷம் அருந்தி உயிரை விட்ட சம்பவம் மதுரை திருமங்கலம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. காதல் திருமணம் செய்யும் சிலர், பின்னாளில் எதார்த்தமான வாழ்க்கையை வாழும் போது, நடைமுறை சிக்கல்களை எதிர்கொள்ள முடியாமல் பிரிந்துவிடுகிறார்கள். ஆணோ அல்லது பெண்ணோ, இந்த பிரிவினை ஏற்க முடியாமல் உயிரையே விடும் அளவிற்கு தவறான முடிவினையும் எடுக்கிறார்கள். ஆனால் எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது. தற்கொலை செய்யும் மன நிலை வந்தால் உடனே மாநில அரசின் உதவி எண்ணான 104க்கு அழைக்கவும். அல்லது ஐ கால் என்ற 9152987821 எண்ணிற்கு அழைத்து மனநல ஆலோசனை பெறலாம். சினோகா தற்கொலை தடுப்பு அமைப்பின் 044 2464 0050 என்ற எண்ணிற்கு அழைத்து ஆலோசனை பெறலாம்.












Click it and Unblock the Notifications