இதோ இவரும் சொல்லிட்டாருல்ல.. டாஸ்மாக் நோக்கி படையெடுக்கும் இளைஞர்கள்: அரசுக்கு செக் வைக்கும் ஆதினம்
மதுரை : ஆதீனத்தின் 293 வது மடாதிபதியாக பொறுப்பேற்ற ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் வழக்கமான ஆதீனம் போல் இல்லாமல் சமூக அக்கறையுடன் பேசி அரசுக்கு கோரிக்கையும் வைத்துள்ளார். டாஸ்மாக்கால் இளைஞர்கள் சீரழிவதையும், தேசபக்தி, தேச நலம் இல்லாமல் சினிமா, அரசியல் பக்கம் செல்லும் இளைஞர்கள் குழப்ப மனநிலையில் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
மதுரை ஆதீனத்தின் 292வது மடாதிபதி அருணகிரிநாதர் சமீபத்தில் காலமானார். மதநல்லிணக்கம், சமூக நீதியில் அதிக அக்கறைக்கொண்டிருந்த அருணகிரிநாதர் அரசுக்கு எதிராக பெரிதாக கருத்து தெரிவித்ததில்லை. ஆனால் தற்போது 293 வது மடாதிபதியாக பொறுப்பேற்றுள்ள ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் நேற்று அளித்த பேட்டியில் இளைஞர்கள் நிலை குறித்து கவலை தெரிவித்தார். அரசு டாஸ்மாக் மூலமாகத்தான் வருமானம் திரட்ட வேண்டுமா? என கேள்வி எழுப்பினார்.

''தேச பக்தராக இருந்த வ.உ.சி தன்னுடைய சொத்து எல்லாவற்றையும் இந்த நாட்டிற்காக தியாகம் செய்தார். அந்த தியாக மனப்பான்மை இன்றைய இளைஞர்களிடம் இல்லை. இளைஞர்கள் எதையோ இழந்ததை மாதிரி அலைகிறார்கள். அதற்குக் காரணம், ஒன்று அரசியல் மற்றொன்று சினிமா. இந்த இரண்டும் சேர்ந்து இளைஞர்களை குழப்பி உள்ளது. அதனுடைய விளைவு தேசபக்தி குறைந்து கொண்டு வருகிறது. அது மாற்றப்பட வேண்டும்.
விநாயகர் சதுர்த்தி சமய விழா அல்ல, அது சமுதாய விழா, தேசபக்தியை ஏற்படுத்திய ஒன்று. வெள்ளையர்களுக்கு எதிராக மக்களை திரட்ட திலகர் கையிலெடுத்த ஆயுதம் என ஆதீனம் அரசுக்கு தெரிவித்துள்ளார். ஒருபுறம் விநாயகர் சதுர்த்தி குறித்து மத்திய அரசு உத்தரவின் பேரில் தமிழக அரசு பொது இடங்களில் சிலை வைக்க தடைவிதித்துள்ளது. அதை எதிர்த்து பாஜக, இந்துத்துவ அமைப்புகள் போராட்டம் அறிவித்துள்ள நிலையில் ஆதீனம் இவ்வாறு பேட்டி அளித்திருப்பது அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
ஆதீனம் கவலைத்தெரிவித்த மற்றொரு முக்கியமான விஷயம் இளைஞர்கள் எதை நோக்கி போகிறார்கள் என்பது பற்றி. அரசியல், சினிமாவை நோக்கிச் செல்லும் இளைஞர்கள் குழப்ப மனநிலையில் உள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அரசியல் விமர்சகர் ஒருவரிடம் கேட்டபோது, " அரசியலிலும், சினிமாவிலும் நல்லதும், தீயவைகளும் உள்ளது. இளைஞர்கள் எதை தேர்வு செய்கிறார்கள் என்பதைப்பொறுத்தே எதுவும் அமையும் என்பது சமூக,அரசியல் பார்வையாளர்கள் கருத்தாக உள்ள நிலையில் தமிழக இளைஞர்களுக்கும் அது பொறுந்தும்.
மற்றொரு புறம் அரசியலில் வடமாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் சமூக நீதி அரசியலின் தாக்கம் மேலோங்கி நிற்பதும், அது சார்ந்த அரசியலும் வெல்வதை பார்க்கும்போது தமிழகத்தில் 45% மேல் உள்ள இளைஞர்கள் வடமாநிலத்தவர் போல் அல்லாமல் நல்ல பாதையை அரசியலில் தேர்ந்தெடுத்துள்ளனர் என்றே சொல்லலாம், அதேப்போன்றுத்தான் சினிமாவிலும் அது பெரிய இண்டஸ்ட்ரி என்பதால் அத்துறையினர் லாப நோக்கோடு செயல்படும் நிலை இருந்தாலும் அற்புதமான படைப்புகளும் வருகிறது, அதற்கு ஆதரவும் உள்ளது.
ஆகவே ஒட்டுமொத்தமாக இளைஞர்கள் குழப்ப மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை முழுதும் ஏற்றுக்கொள்ள முடியாது" என்று தெரிவித்தார். ஆதீனத்தின் மற்றொரு குற்றச்சாட்டாக மது விற்பனை இளைஞர்கள் மதுவால் சீரழிவது குறித்த பதிவு. இதை யாரும் புறந்தள்ள முடியாது.
தமிழகத்தில் மதுவிற்பனை நாளுக்கு நாள் அதிகரிப்பதும், பண்டிகை காலங்களில் உச்சத்துக்கு செல்வதும், 14 வயதுக்கு மேலுள்ளோர் மதுப்பழக்கத்துக்கு ஆளாகின்றனர், அதாவது பள்ளிபருவத்திலேயே மதுவுக்கு அடிமையாகின்றனர் என்பதும் கவலைக்குரிய ஒன்றாக உள்ளது.
20 வயதில் மதுப்பழக்கத்துக்கு ஆளாகும் ஒருவன் பின்னர் அதற்கே அடிமையாகி 40 வயதில் எந்தப்பணியையும் செய்ய முடியாமல் முடங்கிவிடுகின்றனர் என்பது மருத்துவர்கள் எச்சரிக்கையாக உள்ளது. அதே நேரம் மதுப்பழக்கம் அதிக அளவில் மது அருந்தினால் மட்டுமே போதை என்பதால் சம்பாத்தியம் முழுவதும் அதற்கு செல்வதும், சிலர் அதை மீறி வீட்டில் உள்ள பணம், பொருளை எடுத்துச் சென்று மது அருந்துவதும் அதிகரிக்கிறது.
இன்னும் சிலர் மதுவுடன் கூடுதலாக வேறு சில போதைப் பழக்கக்கத்திற்கும் ஆளாகும் நிலையில் அதற்கான குற்றச்செயலில் ஈடுபடுவதும், பின்னர் சிக்கிக் கொண்டு சிறைச் செல்வதும், வெளியில் வந்தப்பின் வழக்குச் செலவுக்காக பணம் தேவை என்கிற நிலையில் மீண்டும் குற்றச்செயலில் ஈடுபடுவது வாடிக்கையாகி வருகிறது. இது ஒரு மனிதனை மட்டும் முடக்கவில்லை. அவனது குடும்பத்தையும் சேர்த்து முடக்கிவிடுகிறது.
மதுவால் நிதானமிழந்து குற்றச்செயலில் ஈடுபடுவதும், சில நேரம் கொலையில் முடிவதும் தினசரி செய்திகளாக வரும் நிலையில் டாஸ்மாக் கடைகளை முழுதும் மூடாமல் ஏற்கெனவே அரசுகள் வாக்களித்தப்படி படிப்படியாக மதுக்கடைகள் எண்ணிக்கையை குறைப்பதும், மதுக்கடைகள் திறந்திருக்கும் நேரத்தை குறைப்பதும் படிப்படியான முன்னேற்றத்தை நோக்கிச் செல்லும் என்பதே சமுக அக்கறை உள்ள அனைவரின் கருத்தாக உள்ளது.
அதையே ஆதீனமும் பிரதிபளித்துள்ளார். அரசுக்கு எச்சரிக்கையாகவும், தனது வருத்தத்தையும் பகிர்ந்துள்ளார். ஆதீனம் கருத்து மட்டுமல்ல மருத்துவர்கள், உளவியல் நிபுணர்கள், குடும்பப்பெண்கள் அனைவரின் கருத்தும் இதே தான் என்கிற நிலையில் சட்டப்பேரவையில் ஆதீனம் கருத்தையும், தற்போதைய முதல்வரே மதுக்கடைகளை குறைக்கவேண்டும் என்று போராடியவர் என்கிற ரீதியிலும் மதுக்கடைகள் விஷயத்தில் அரசு நல்ல முடிவை நோக்கி நகரும் என்று நம்புவோமாக.












Click it and Unblock the Notifications