கவுன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சி.. போட்டியாளரை பார்த்து அமிதாப் கேட்ட "சர்ச்சை" கேள்வியால் பரபரப்பு
மும்பை: ரூ 2000 நோட்டில் ஜிபிஎஸ் இருக்கா என பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் எழுப்பிய கேள்விகள் நெட்டிசன்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளன.
இந்தியாவின் பிரபலமான டிவி ஷோக்களில் ஒன்று குரோர்பதி நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியை நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கி வருகிறார்.
இதில் பொது அறிவு குறித்த கேள்விகள் இடம் பெறும். இது போல் தமிழிலும் கோடீஸ்வரி, ஜாக்பாட், நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

தெலுங்கு- கன்னடம்
அது போல் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் அந்தந்த முன்னணி நட்சத்திரங்களை கொண்டு இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த வகையில் இந்தியில் கவுன் பனேகா குரோர்பதி எனும் நிகழ்ச்சியை அமிதாப் பச்சன் தற்போது 14 ஆவது சீசனாக தொகுத்து வழங்கி வருகிறார்.

வரவேற்பு
இந்தியில் இந்த நிகழ்ச்சிக்கு வரவேற்பு அதிகம் உள்ளது. வாரந்தோறும் நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியானது. அதில் ஹாட் சீட்டில் இருக்கும் போட்டியாளரிடம் "பின்வருவனவற்றுள் ஜிபிஎஸ் தொழில்நுட்ம் எதில் இருக்கிறது" என அமிதாப் கேள்வி எழுப்பியுள்ளார்.

ரூ 2000 நோட்டு
அதற்கு டை ரைட்டர், டெலிவிஷன், சாட்டிலைட், ரூ 2000 நோட்டு என 4 ஆப்ஷன்களை அமிதாப் கொடுத்திருந்தார். அந்த கேள்விக்கு கொஞ்சமும் யோசிக்காத போட்டியாளர், 4ஆவது ஆப்ஷனான 2000 நோட்டில்தான் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் இருக்கிறது என கூறியிருந்தார். அதற்கு அமிதாப் , தவறான பதில் என்றார்.

போட்டியாளர் கூறிய பதில்
ஆனால் அந்த போட்டியாளரோ இல்லை நான் சொன்னது சரிதான் நீங்கள் என்னை பிராங்க் செய்கிறீர்கள் என்றார். ரூபாய் நோட்டில் ஜிபிஎஸ் இருக்கிறது என்பதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன் என்றார். அதற்கு பார்வையாளர்களை பார்த்து அமிதாப், உண்மைத் தன்மையற்ற செய்திகளை எப்போதும் நம்பாதீர்கள் என கூறினார்.

ப்ரோமோ
இந்த ப்ரோமோவை சோனி தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளது. அதில் இது போன்று வதந்திகளை நம்புவோரை டேக் செய்து முதலில் அறிவை சேகரித்துக் கொள்ள சொல்லுங்கள் என பதிவிட்டு குரோர்பதி 2022 விரைவில் ஒளிபரப்பப்படும் என அந்த ட்விட்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரூ 2000 நோட்டு
2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த ப்ரோமோவை பார்த்ததால் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் இது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. முன்னதாக பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு ரூ 2000 நோட்டு அச்சடிக்கப்பட்ட போது அதில் ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட சிப் இருக்கிறது என பாஜகவினரும் வலது சாரிகளும் தெரிவித்திருந்தது நினைவுக்கூரத்தக்கது.












Click it and Unblock the Notifications