காங்கிரஸ்க்கு முதல் வெற்றியை கொடுத்த பெண்.. யார் இந்த ஆஷா தீபக் காலே? திரும்பி பார்த்த மும்பை!
மும்பை: மும்பை மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்காக முதல் வெற்றியை காங்கிரஸ் கட்சியின் ஆஷா தீபக் காலே பதிவு செய்துள்ளார். தாராவியின் 183வது வார்டில் போட்டியிட்ட சிவசேனா வேட்பாளர் வைஷாலி ஷெவாலேவை 1,450 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற ஆஷா தீபக், தங்களின் வார்டில் பாஜக ஒரு பெரிய சக்தியே இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா தலைநகர் மும்பை உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கு நேற்று நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. மும்பை உள்ளிட்ட பல மாநகராட்சிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இன்னும் சில மாநகராட்சிகளில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதில் மும்பையில் மொத்தம் முள்ள 227 வார்டுகளில் பாஜக 85 வார்டுகளிலும், சிவ சேனா 27 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் பாஜக - சிவசேனா கூட்டணி 112 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு 114 வார்டுகளின் வெற்றி தேவை. அதேபோல் உத்தவ் தாக்கரேவின் சிவ சேனா கட்சி 72 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.
அதன் கூட்டணி கட்சியான மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா கட்சி 10 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 21 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஒரு வார்டிலும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் இரண்டு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்தே களமிறங்கியது.
இந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய வெற்றி கிடைக்கவில்லை என்றாலும், மும்பையின் தாராவி பகுதியில் வார்டு 183ஐ கைப்பற்றி அசத்தி இருக்கிறது. சிவசேனா வேட்பாளர் வைஷாலி ஷெவாலேவை 1,450 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஆஷா தீபக் காலே வென்றுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முதல் வெற்றியாகவும் இது அமைந்தது.
அதிலும் சிவசேனா வேட்பாளர் வைஷாலி ஷெவாலே முன்னாள் எம்பி ராகுல் ஷெவாலேயின் நெருங்கிய உறவினர். அதேபோல், காங்கிரஸ் வேட்பாளர் அஷ்ரஃப் அஸ்மி, மேற்கு குர்லா வார்டை கைப்பற்றி இருக்கிறார். மத்திய மும்பை பகுதியில் காங்கிரஸ் கட்சி இன்னும் வலுவாக இருப்பதை இவரின் வெற்றி உறுதி செய்திருக்கிறது.
இந்த இரு காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றியும் நகர்ப்புறப் பகுதிகளில் பாஜகவை எதிர்கொள்ள முடியும் என்ற காங்கிரஸின் திறமையை வெளிப்படுத்தி இருப்பதாக பார்க்கப்படுகிறது. இந்த வெற்றிக்கு பின் ஆஷா தீபக் காலே பேசுகையில், எங்கள் வார்டில் பாஜக ஒரு சக்தியே இல்லை.. என் வெற்றிக்கு எங்கள் எம்பி வர்ஷா கெய்க்வாட் மற்றும் எம்எல்ஏ ஜோதி கெய்க்வாட் ஆகியோர் காரணம். எங்கள் கட்சியினரின் ஆதரவும் அபரிவிதமாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications