அவங்க எல்லாம் விவசாயிகள் இல்ல... கொளுத்திப்போட்ட கங்கனா... பதிவுகளை தூக்கிய ட்விட்டர்
மும்பை: பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் விவசாயிகள் போராட்டம் குறித்துப் பதிவிட்ட இரண்டு சர்ச்சைக்குரிய ட்வீட்களை அந்நிறுவனம் நீக்கியுள்ளது.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விவசாய சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தலைநகரில் போராடி வருகின்றனர்,
இந்நிலையில், குடியரசு தின டிராக்டர் பேரணிக்கு பிறகே பதற்றம் அதிகரித்துள்ளது. போராட்டத்திற்கு அதிகளவில் மக்கள் செல்வதைத் தடுக்கும் வகையில் சுவர்கள் எழுப்பப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் போராட்டம் நடைபெறும் இடங்களில் இணையச் சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச பிரபலங்கள் ஆதரவு
இந்நிலையில், இந்தியாவில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் குறித்து நாம் ஏன் பேசுவதில்லை என பிரபல பாப் பாடகி ரிஹான்னா ட்வீட் செய்திருந்தார். அவரை தொடர்ந்து மியா கலிஃபா, இளம் பருவ நிலை ஆர்வலர் கிராட்டா தன்பெர்க் உள்ளிட்ட சர்வதேச பிரபலங்கள் பலரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக ட்வீட் செய்திருந்தனர். இருப்பினும், இது இந்தியாவின் உள்நாட்டு பிரச்னை என்றும் இதில் அந்நியர்கள் யாரும் தலையிட வேண்டாம் என்றும் பாலிவுட் நடிகர்கள், இந்திய கிரிக்கெட் வீரர்கள் என பலரும் ட்வீட் செய்து வருகின்றனர்.

பயங்கரவாதிகள்
பாப் பாடகி ரிஹான்னாவின் கருத்திற்கு கங்கனா ரனாவத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பாப் பாடகி ரிஹான்னாவின் ட்வீட்டை ரீட்வீட் செய்துள்ள கங்கனா, "இது குறித்து யாரும் பேசாததற்குக் காரணம் அவர்கள் விவசாயிகள் அல்ல; இந்தியாவைப் பிரிக்கத் திட்டமிட்டுள்ள தீவிரவாதிகள். அமெரிக்காவைப் போல பிளவுபட்டுள்ள ஒரு நாட்டிற்குள் சீனா எளிதாக நுழைந்துவிடும். உங்களைப்போல நாட்டை விற்பவர்கள் நாங்கள் அல்ல'' என்று பதிவிட்டிருந்தார்.

ட்வீட்கள் நீக்கம்
அதேபோல #IndiaTogether என்று ரோஹித் சர்மா பதிவிட்டிருந்த ட்வீட்டை ரீட்வீட் செய்த கங்கனா, கிரிக்கெட் வீரர்கள் பலரும் உண்மையைக் கூற அஞ்சுகிறார்கள் என்று பதிவிட்டிருந்தார். மேலும், அவர்கள் விவசாயிகள் இல்லை பயங்கரவாதிகள் என்றும் அவர் பதிவிட்டிருந்தார். ட்விட்டரின் விதிமுறைகளுக்கு எதிராக உள்ளதாகக் கூறி இந்த இரு ட்வீட்களையும் அந்நிறுவனம் நீக்கியுள்ளது.

முதன்முறை அல்ல
கங்கனா ரனவத் கடந்த சில மாதங்களாகவே சர்ச்சைக்குரிய ட்வீட்களை அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். அதேபோல அவரது ட்வீட்கள் நீக்கப்படுவது இது முதல் முறை இல்லை. ஏற்கனவே, ஜனவரி மாதம் தந்தவ் தொடர் குறித்து மிகவும் சர்ச்சைக்குரிய ட்வீட் ஒன்றை கங்கனா பதிவிட்டிருந்தார். அதைத்தொடர்ந்து அவரது ட்விட்டர் கணக்கு சில மணி நேரம் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications