கொரோனா யுடர்ன்...சீனாவில் அதிகரிக்கும் கட்டுப்பாடு... விரக்தியில் மக்கள் - 4வது அலை தாக்குமா
உலகம் முழுவதும் கொரோனாவால் 51,83,11,140 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து 47,31,88,237 பேர் மீண்டுள்ளனர். கொரோனாவால் உலகம் முழுவதும் 62,79,884 பேர் உயிரிழந்துள்ளனர்.
மும்பை: உலகம் முழுவதும் கொரோனாவால் 51,83,11,140 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து 47,31,88,237 பேர் மீண்டுள்ளனர். கொரோனாவால் உலகம் முழுவதும் 62,79,884 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகம் முழுவதும் 39,498 பேர் கவலைக்கிடமான வகையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மக்கள் வெளியே நடமாடவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்
சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.

ஷாங்காயில் கொரோனா பரவல்
சீனாவில் கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா பாதிப்பு தொடங்கியதிலிருந்து ஷாங்காய் நகரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. சீனாவின் பொருளாதார தலைநகரமான ஷாங்காய், இப்போது தனித்தீவு போல காட்சி அளிக்கிறது. 2.5 கோடி மக்கள் வாழ்கிற அந்த நகரில் கொரோனா பரவல் அதிகரித்ததால், பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. கடந்த மாத மத்தியில் தினமும் 26 ஆயிரம் பேர் வரையில் தொற்று பரவியது. இப்போது தொடர் கட்டுப்பாடுகள் காரணமாக தினசரி பாதிப்பு 3 ஆயிரம் அளவுக்கு குறைந்துள்ளது.

ஷாங்காயில் தினசரி பாதிப்பு
நேற்று முன்தினம் 3 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதியானது. 6 பேர் தொற்றால் உயிரிழந்தும் உள்ளனர். கொரோனா தொற்று மேலும் பரவாமல் இருக்க, பாதிப்புக்குள்ளானோர் வீடுகளில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. ஒரு வீட்டில் ஒரே கழிவறையை, சமையல் அறையை ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பகிர்கிற நிலையில், அவர்களின் வீடுகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்படும் என ஷாங்காய் நகர அதிகாரி ஜின் சென் கூறியுள்ளார்.

சுரங்க ரயில் சேவைகள் நிறுத்தம்
அந்த நகரில் 2 சுரங்க ரயில் பாதைகளில் மட்டும் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இப்போது அதுவும் நேற்று முதல் நிறுத்தப்பட்டு விட்டது. முதல் முறையாக நகரின் ஒட்டுமொத்த சுரங்க ரயில் சேவையும் மூடப்பட்டு விட்டது என்று அங்கிருந்து வரும் ஆன்லைன் ஊடக தகவல் கூறுகிறது. சமீப காலமாக கட்டுப்பாடுகளுடன்கூட பொதுமக்கள் சில மாவட்டங்களில் கடைகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டு வந்தனர். தற்போது அவர்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இது மக்களை விரக்தியில் ஆழ்த்தி உள்ளது.

பீஜிங்கில் கட்டுப்பாடு
இதற்கிடையே தலைநகர் பீஜிங்கில் கொரோனா பரவி விடாமல் தடுக்க 3 நாட்கள் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது. நேற்று இந்த பரிசோதனை தொடங்கி உள்ளது. நேற்று முன்தினம் இந்த நகரில் 74 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இங்கு தனிப்பட்ட கட்டிடங்கள், குடியிருப்பு வளாகங்கள் பூட்டப்பட்டுள்ளன. ஹோட்டல்களுக்கு சென்று சாப்பிட அனுமதி இல்லை. 60 சுரங்க ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

உலகம் முழுவதும் கொரோனா
உலகம் முழுவதும் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 585,778 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 51,83,11,140பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து உலகம் முழுவதும் ஒரே நாளில் 6,70,670 பேர் மீண்டுள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 47,31,88,237 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உலகம் முழுவதும் 1,667 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 62,79,884 பேராக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் பாதிப்பு அதிகம்
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 53,606 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 8,37,55,472 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10,25,012 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கொரோனா கட்டுப்பாடுகள் முற்றிலும் தளர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்று மீண்டும் மெல்ல அதிகரித்து வருகிறது. 2,496 பேர் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,31,10,185 பேராக உயர்ந்துள்ளது.

லட்சக்கணக்கானோர் பாதிப்பு
பிரான்ஸ் நாட்டில் 56,449 பேர் புதிதாக ஒரே நாளில் கொரேனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜெர்மனியில் 1,04,449 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்கொரியாவில் ஒரே நாளில் 49,896 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலி நாட்டில் 56,015 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

4வது அலை தாக்குமா?
ஓமிக்ரான் வைரஸ் மட்டுமே கடைசி கொரோனா இல்லை என்றும் கொரோனாவில் இருந்து தப்பிக்க தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம் என்றும் உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. ஜூன் மாதத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்றும், 4வது அலை உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதால் பல நாடுகளில் மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications