அதிர்ச்சி.. கொரோனாவால் பாதிக்கப்பட்ட இருவர் மும்பையில் பலி.. இந்தியாவில் மீண்டும் கொரோனா மரணங்கள்?
மும்பை: இப்போது ஆசியாவில் பல்வேறு இடங்களிலும் கொரோனா பாதிப்பு வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா கேஸ்கள் பல்வேறு பகுதிகளிலும் அதிகரித்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே மும்பையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த இருவர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பரவிய கொரோனா பாதிப்பு நம்மை ஒரு வழி செய்துவிட்டது. அந்த கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வரவே நமக்கு சில ஆண்டுகள் வரை ஆனது. கொரோனா தடுப்பூசி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே நமக்கு கை கொடுத்தது. அதேநேரம் கொரோனா ஏற்படுத்திய பொருளாதார பாதிப்பிலிருந்து நாம் இன்னும் மீளவில்லை.

திடீரென அதிகரிக்கும் கொரோனா கேஸ்கள்
இதற்கிடையே இப்போது ஆசியாவில் பல்வேறு பகுதிகளிலும் திடீரென கொரோனா கேஸ்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எங்கு மீண்டும் ஒரு கொரோனா அலை ஏற்படுமோ இதனால் ஊரடங்கு அறிவிக்கப்படுமோ என்ற அச்சத்தில் இருக்கிறார்கள்.
இந்தியாவிலும் கூட இப்போது மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுக்க 250க்கும் மேற்பட்டோர் இப்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே மும்பையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.
இருவர் உயிரிழப்பு
பரேலில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் உயிரிழந்துள்ளனர். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 59 வயது பெண்ணும், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமியும் சமீபத்தில் உயிரிழந்தனர். அவர்கள் உயிரிழந்த பிறகு, அவர்களின் மாதிரிகளை சோதனை செய்த போது அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதேநேரம் கொரோனா காரணமாக இந்த மரணம் ஏற்படவில்லை என்பதை மருத்துவர்கள் தெளிவுபடுத்தினர்.
சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் திடீரென கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் சூழலில், இந்தியாவிலும் கொரோனா கேஸ்கள் அதிகரித்துள்ளன. அதிலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் மரணத்திற்கு கொரோனா காரணமில்லை என்ற போதிலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட இருவர் உயிரிழந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவர்கள் சொல்வது என்ன
இது தொடர்பாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில், "அவர்கள் மரணத்திற்கு கொரோனா காரணமில்லை.. 14 வயது சிறுமிக்கு நெஃப்ரோடிக் பாதிப்பு இருந்தது. அந்த சிறுமி சிறுநீரக செயலிழப்பு காரணமாக உயிரிழந்தார். மறுபுறம், புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பெண் செப்சிஸால் காரணமாக இறந்தார். கொரோனா வைரஸ் இப்போது வீரியமிக்கதாக இல்லை. இதனால் நாம் அச்சப்படத் தேவையில்லை" என்றார்.
மும்பையில் உள்ள இந்த மருத்துவமனையிலேயே கடந்த இரண்டு மாதங்களில் 15 பேருக்கு கொரோனா வைரஸ் பதிவாகியுள்ளன. இருப்பினும், அவர்கள் அனைவருக்கும் லேசான அறிகுறிகளும் காய்ச்சலும் மட்டுமே ஏற்பட்டிருந்தது. இதனால் அவர்கள் எந்தவொரு சிக்கலும் இல்லாமல் குணமடைந்தனர்.
நாம் கவலைப்பட வேண்டுமா?
பொதுவாக இணை நோய் உள்ளவர்கள், வயதானவர்களுக்கு மட்டுமே கொரோனாவால் தீவிர பாதிப்பு ஏற்பட்டு வந்தது. அதுவும் கூட சமீப காலங்களில் குறைந்துவிட்டது. இதனால் கொரோனா பாதிப்பால் நாம் பெரியளவில் கவலை கொள்ளத் தேவையில்லை என்றே சிங்கப்பூர் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கமான காய்ச்சலைப் போலவே இது இருக்கும் என்கிறார்கள். இருப்பினும், இணை நோய் உள்ளவர்களும் முதியவர்களும் பூஸ்டர் வேக்சின் போட்டுக் கொள்ளவும் அவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications