பாஜகவிடம் தப்புமா சிவசேனா அரசு? இன்று கூடுகிறது அமைச்சரவை - அனல் பறக்கும் மகாராஷ்டிரா அரசியல்
மும்பை: மகாராஷ்டிரா மாநில எம்.எல்.ஏக்கள் குஜராத் மாநிலத்தில் உள்ள ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டு இருக்கும் நிலையில் இன்று கேபினட் அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது.
Recommended Video
மகாராஷ்டிரா சட்டசபையில் உள்ள 288 இடங்களில் பாஜகவுக்கு 106 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். 2019 தேர்தலில் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்ட சிவசேனாவுக்கு 55 இடங்கள் கிடைத்தன.
ஆனால் தேர்தலுக்கு பிறகு யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் சிவசேனா, காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ், சிறு கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் ஆதரவுடன் ஆட்சியமைத்தது.

பாஜகவின் சதி
சிவசேனா தலைமையிலான மகா விகாஷ் அகாடி கூட்டணி ஆட்சிக்கு மொத்தம் 169 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தது. தொடர்ந்து பாஜகவுக்கு எதிராக அரசியல் செய்து வந்த ஆளும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளை பல வகைகளில் வளைக்க முயன்றது பாஜக. அதன் பயனாக மாநிலங்களவை மற்றும் சட்ட மேலவைத் தேர்தலில் பாஜகவின் ஆட்டத்துக்கு ஓரளவு வெற்றி கிடைத்தது.

குதிரைபேரம்
இதனால் சிவசேனா கட்சிக்குள் தலைமைக்கு எதிரான அதிருப்தி மனநிலை எழத் தொடங்கியது. இதுதான் சரியான சந்தர்ப்பம் என்பதை உணர்ந்த பாஜக தனது வழமையான குதிரை பேர முறையை கையில் எடுத்து இருக்கிறது. பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் சிவசேனா அமைச்சர் ஏக்னாத் ஷிண்டே தலைமையிலான சேர்ந்த 13 எம்.எல்.ஏக்கள் முகாமிட்டு உள்ளதாகவும் அவர்களில் 5 பேர் அமைச்சர்கள் என்றும் ஒருவர் சுயேட்சை எம்.எல்.ஏ என்றும் தகவல் வெளியானது.

ஏக்நாத் ஷிண்டே
மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால் இவர்களுடன் சேர்த்து அக்கட்சியின் பலம் 134 ஆக அதிகரிக்கும். ஆனால், ஆட்சியை கைப்பற்ற மேலும் 11 எம்.எல்.ஏக்கள் தேவை என கூறப்பட்டது. இந்த நிலையில், சிவசேனா தலைவர் மிலிந்த் நர்வேகர் ஏக்நாத் ஷிண்டேவை சந்தித்துப் பேசினார். அப்போது, தன்னுடன் 35 எம்.எல்.ஏக்கள் இருப்பதாகவும், பாஜகவுடன் சிவசேனா கூட்டணி வைக்க ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

எம்.எல்.ஏக்கள் லிஸ்ட்
இந்த நிலையில் குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டலில் தங்கி இருக்கும் சிவசேனா எம்.எல்.ஏக்கள் 33 பேரின் பெயர் பட்டியல் வெளியாகி அதிர்ச்சியடைய செய்து இருக்கிறது. அதில் தொர்வே மகேந்திரா, கொகாவலே பாரத், டால்வி மகேந்திரா, பாபர் அனில், ஷிண்டே மகேஷ், பாட்டில் சஹாஜி, தேசாய் ஷாம்புராஜ், கல்யான்கர் பாலாஜி, சவுகுலே யான்ராஜே, பொர்னாரே சந்திபான், சத்தார் அப்துல், தேஷ்முக் நிதின் உள்ளிட்டோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளனர்.

உத்தவ் தாக்கரே ஆலோசனை
இந்நிலையில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மகா விகாஷ் அகாடி கூட்டணி கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். மகாராஷ்டிரா துணை முதலமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவருமான அஜித் பவார், மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர்கள், சிவசேனா கட்சி மூத்த தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். நாளை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரையும் சந்தித்து அவர் ஆலோசிக்க உள்ளார்.

ஏக்நாத் ஷிண்டேவின் நிபந்தனை
இந்த நிலையில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுடன் செல்போனில் பேசிய முதலமைச்சர் பதவிக்கு தான் ஆசைப்படவில்லை எனவும், சிவசேனா கட்சி காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பதை எம்.எல்.ஏக்கள் விரும்பவில்லை என்றும், தன் மீது கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் எனவும் நிபந்தனை விதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், ஏக்நாத் ஷிண்டே எம்.எல்.ஏக்களுடன் சூரத் சென்ற தகவல் வெளியான சில மணி நேரங்களிலேயே அவர் சிவசேனா எம்.எல்.ஏக்கள் குழு தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.

இன்று அமைச்சரவைக் கூட்டம்
இது ஒருபுறம் இருக்க காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஒருபுறமும், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் மறுபக்கமும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில கேபினட் அமைச்சர்கள் கூட்டம் இன்று நடைபெறும் என்று ஆளும் சிவசேனா அரசு அறிவித்து இருக்கிறது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்த முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications