துபாய் வேலை.. மும்பை ஏர்போர்ட்டில் தவிப்பு.. சினிமாவை மிஞ்சும் தமிழ்ச்செல்வன் எம்எல்ஏவின் வாழ்க்கை!
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் 3-வது முறையாக பாஜக வேட்பாளராக களம் காண்கிறார் தமிழரான கேப்டன் தமிழ்ச்செல்வன். தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், மும்பை ரயில் நிலையத்தில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வார்டு கவுன்சிலராகி பின்னர் மக்கள் ஆதரவுடன் 2 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல் நவம்பர் 20-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. மகாராஷ்டிரா தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் முதல் கட்ட பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் தமிழரான கேப்டன் தமிழ்ச்செல்வனுக்கு 3-வது முறையாக போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் சயான் கோலிவாடா தொகுதியில் 3-வது முறையாக களம் காண்கிறார் கேப்டன் தமிழ்ச் செல்வன்.

தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்கோட்டை அருகே பிலா விடுதி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். கேப்டன் தமிழ்ச்செல்வன் மும்பைக்கு சென்றது, 2 முறை எம்.எல்.ஏவாக இன்று கொடி கட்டி பறப்பது என்பதன் பின்னணியில் சினிமாவை மிஞ்சும் துயரம் நிறைந்தே இருக்கிறது. துபாயில் வேலைவாங்கித் தருவதாக ஏஜெண்ட் ஒருவர் கூறியதை நம்பி மும்பைக்கு சென்றவர்தான் தமிழ்ச்செல்வன். ஆனால் மும்பை விமான நிலையத்திலேயே ஏஜெண்ட் கைவிட்டுவிட சொந்த ஊர் திரும்ப விரும்பாமல் மும்பையிலேயே தங்கிவிட்டார் தமிழ்ச்செல்வன். மும்பை ரயில் நிலையத்தில் சாதாரண கூலித் தொழிலாளியாக வாழ்க்கையை புதியதாக ஆரம்பித்த தமிழ்ச் செல்வன், மும்பை வாழ் தமிழர்களுக்காக உதவுவதில் தீவிரமாக ஈடுபட்டார். இதற்கு பரிசாகவேர் வார்டு கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனையடுத்து 2014-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் முதல் முறையாக சயான் கோலிவிடா தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. அந்த தேர்தலில் 40,869 வாக்குகளைப் பெற்று சிவசேனாவின் மகேஷ் சதம்கரை 3,738 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வாகை சூடினார். 2019-ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் சயான் கோலிவாடா தொகுதியில் போட்டியிட்ட தமிழ்ச்செல்வன், 54,845 வாக்குகளைப் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் கணேஷ்குமார் யாதவை 13,951 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். மும்பை பயங்கரவாத தாக்குதலின் போது படுகாயமடைந்த பொதுமக்களை தள்ளு வண்டியில் அமரவைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதால் அதிக கவனம் பெற்றதுடன் தமிழ்ச்செல்வன் 'கேப்டன்' தமிழ்ச்செல்வனானார். இந்த மகத்தான சேவைக்காக ஆளுநரிடம் இருந்து விருதும் பெற்றிருந்தார் தமிழ்ச்செல்வன்.
2019-ம் ஆண்டு தமிழ்ச்செல்வன் மகள் வைஷாலிக்கும் புதுக்கோட்டை தொண்டமான் குடும்பத்தைச் சேர்ந்த ராஜூவுக்கும் திருமணம் நடந்தது. அப்போது மகாராஷ்டிரா முதல்வராக இருந்த தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்துக்கு வருகை தந்திருந்தனர். கடந்த லோக்சபா தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலையை ஆதரித்தும் பிரசாரம் செய்தார் தமிழ்ச்செல்வன். மகாராஷ்டிராவில் எம்.எல்.ஏ.வாக சுப்பிரமணியம் என்ற தமிழர் 30 ஆண்டுகளுக்கு முன்னர் பதவி வகித்தார். அவருக்கு அடுத்ததாக மகாராஷ்டிராவில் எம்.எல்.ஏ.வான தமிழர் என்ற பெருமை பெற்றவர் தமிழ்ச்செல்வன். சயான் கோலிவாடா தொகுதியில் இந்த முறை போட்டியிடும் தமிழ்ச்செல்வன் ஹார்ட்ரிக் வெற்றியை அறுவடை செய்வார் என்பது தமிழர்களின் நம்பிக்கை.












Click it and Unblock the Notifications