அடித்து துவைத்த கனமழை.. அப்படியே சரிந்து விழுந்த கட்டிடம்! 5 குழந்தைகள் உட்பட.. 6 பேர் பலியான சோகம்!
மும்பை: அரபிக்கடலை ஒட்டிய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. இந்நிலையில், மும்பையில் பெய்த கனமழை காரணமாக கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 5 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் மகாராஷ்டிராவில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த சில நாட்களாக இடைவிடாது பெய்து வரும் கனமழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மும்பையின் மாங்குர்த் பகுதியில் உள்ள ஜனதா நகரில், ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 8:30 மணியளவில் மூன்று அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது.

6 பேர் உயிரிழப்பு
இந்த விபத்தில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி 5 குழந்தைகள் மற்றும் ஒரு பெண் உட்பட மொத்தம் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படை, மும்பை தீயணைப்புத் துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் விடிய விடிய மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
நிவாரண உதவி
இந்த துயர சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள மகாராஷ்டிர அரசு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
மழையின் பாதிப்புகள்
மும்பையில் பெய்து வரும் அதிகனமழை காரணமாக நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக மும்பை விமான நிலையத்தில் விமான சேவைகள் சுமார் ஒரு மணி நேரம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. தாழ்வான பகுதிகளில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திங்கட்கிழமை (ஜூலை 6) அன்று மும்பை, தானே மற்றும் பால்கர் மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் மும்பைக்கு 'ரெட் அலர்ட்' விடுத்துள்ள நிலையில், பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications