ஆர்யான் கானை விடுவிக்க ஷாரூக் கானிடம் ரூ 25 கோடி பேரம்?.. பகீர் கிளப்பும் தனிநபர் சாட்சி!
மும்பை: போதை பொருள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட ஆர்யான் கானை விடுவிக்க அவரது தந்தை ஷாரூக் கானிடம் ரூ 25 கோடி பேரம் பேசப்பட்டதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இந்த தகவலை போதை பொருள் தடுப்பு பிரிவு மறுத்துள்ளது.
மும்பையிலிருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் கடந்த 3-ஆம் தேதி போதை பொருள்களை சப்ளை செய்யும் பார்ட்டி நடைபெறுவதாக போதை பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவர்கள் பயணிகள் போல் வேடமணிந்து அந்த கப்பலில் பயணித்தனர். கப்பல் புறப்பட்டு நடுக்கடல் வந்தவுடன் பார்ட்டி தொடங்கியது. பலர் போதை பொருள்களை பயன்படுத்த தொடங்கினர்.

போதை பொருள்
அப்போது அவர்களை மாறுவேடத்தில் இருந்த போதை பொருள் தடுப்பு பிரிவினர் சுற்றி வளைத்தனர். இதில் நடிகர் ஷாரூக் கானின் மகன் ஆர்யான் கான் உள்ளிட்ட சிலர் போதை பொருள் பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்திய நிலையில் அவர்கள் போதை பொருளை பயன்படுத்தியது உறுதியானது.

ஷாரூக் கான் மகன்
இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். ஷாரூக் கான் மகன் போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் ஷாரூக் கான் நடித்த BYJUS விளம்பரத்தையும் அந்த நிறுவனம் நிறுத்திவிட்டதாக சொல்லப்படுகிறது.

தீபாவளிக்குள் ஜாமீன்
இந்த நிலையில் ஆர்யானை எப்படியாவது தீபாவளிக்குள் ஜாமீனில் எடுத்துவிட ஷாரூக் கான் போராடி வருகிறார். இருமுறை ஜாமீன் கோரியும் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் மும்பை ஹைகோர்ட்டில் ஆர்யான் கான் தாக்கல் செய்த ஜாமீன் மனு நாளை விசாரணைக்கு வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கிலிருந்து ஆர்யானை விடுவிப்பதற்காக ரூ 25 கோடி பேரம் பேசப்பட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபாகர் செயில்
இந்த குற்றச்சாட்டை தனி நபர் சாட்சியான பிரபாகர் செயில் முன்வைத்துள்ளார். இந்த வழக்கில் மற்றொரு சாட்சியான கோசாவி என்பவரின் மெய்க்காவலர் பிரபாகர் ஆவார். இதுகுறித்து பிரபாகர் கூறுகையில், கப்பலில் சோதனை நடந்த இரவில் கோசாவியும் டிசோசாவும் அங்கே இருந்துள்ளனர். அப்போது கோசாவி டிசோசாவை சந்தித்துள்ளார்.

ரூ 18 கோடிக்கு பணிந்த பேரம்
பின்னர் இருவரும் போனில் பேசிய போது கோசாவி டிசோசாவிடம் ஆர்யான் கானை விடுவிக்க ஷாரூக் கான் தரப்பிடம் இருந்து ரூ 25 கோடி பேரம் பேசப்பட்டதாகவும் இறுதியில் ரூ 18 கோடி பேரம் முடிந்ததாகவும் டிசோசாவிடம் கோசாவி கூறியதை தான் கேட்டதாக பிரபாகர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

18 கோடியில் ரூ 8 கோடி யாருக்கு
அந்த 18 கோடியில் ரூ 8 கோடி போதை பொருள் தடுப்பு பிரிவின் இயக்குநர் சமீர் வாங்கடேவுக்கு கொடுக்கப்படும் என்றும் பிரபாகர் தெரிவித்தார். மேலும் 9 முதல் 10 வெற்று பேப்பர்களில் ஆர்யானை கையெழுத்திடுமாறு என்சிபி அதிகாரிகள் கேட்டுக் கொண்டதாகவும் தெரிகிறது. இந்த குற்றச்சாட்டை என்சிபி அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

முற்றிலும் தவறான குற்றச்சாட்டு
பிரபாகரின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறு என்றும் தவறான நோக்கத்தில் புனையப்பட்டவை என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் கோசாவியின் பாடிகார்டான பிராபகர் 2018 ஆம் ஆண்டு வேலை வாங்கித் தருவதாக பணம் பறித்த மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்தவர் என கூறப்படுகிறது. தற்போது இந்த வழக்கானது நீதிமன்றத்தில் உள்ளது. இந்த வழக்கில் பிரபாகர் சாட்சி என்பதால் எதுவாக இருந்தாலும் அவர் நீதிபதிகளிடம் சொல்ல வேண்டுமே தவிர இப்படி மீடியா முன்னர் கூறுவது தவறு என என்சிபி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications