"சக்கரமும் இல்ல.. பிரேக்கும் இல்ல! அதை ஓட்டுறதுக்கு சண்டை வேற” மகாராஷ்டிராவில் பிரதமர் மோடி கிண்டல்!
மும்பை: மகா விகாஸ் அகாதி கூட்டணியில் சக்கரங்களும் இல்லை, பிரேக்கும் இல்லை, அதை ஓட்டுவதற்கு அந்தக் கூட்டணியில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்கின்றனர் பிரதமர் நரேந்திர மோடி இன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரும் நவம்பர் 20ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜக தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கூட்டணியும், காங்கிரஸ் தலைமையில் சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கூட்டணியும் களம் காண்கின்றன.

பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டா உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி, இன்று சோலாப்பூர் பகுதியில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் காங்கிரஸ் மற்றும் மகா விகாஸ் அகாதி கூட்டணி கட்சிகளைக் கடுமையாக விமர்சித்தார்.
பிரதமர் மோடி பேசுகையில், "உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகியவை சேர்ந்த கூட்டணியான மகா விகாஸ் அகாடி மராகாஷ்டிராவின் வளர்ச்சியை முடக்குகிறது. சந்திராபூர் மக்கள் பல ஆண்டுகளாக ரயில் இணைப்பு வேண்டும் என்று கோரி வருகின்றனர். ஆனால், காங்கிரஸ் மற்றும் அகாடி கூட்டணி அதற்கு அனுமதிக்கவில்லை.
மகாராஷ்டிராவின் வளர்ச்சிப் பணிகளுக்கு முட்டுக்கட்டை போடுவதில் மட்டுமே அவர்கள் பி.எச்.டி பட்டம் பெற்றிருக்கின்றனர். அதிலும் காங்கிரஸ் கட்சி இரட்டை பி.எச்.டி பட்டம் பெற்றுள்ளது. அகாடி என்றால் ஊழலின் மிகப்பெரிய வீரர்கள் என்று பொருள். சுதந்திரத்துக்குப் பின்பு காங்கிரஸ் கட்சி தலித்துகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் முன்னேற்றத்தை அனுமதிக்கவே இல்லை.
மாநிலத்தில் மகாயுதி கூட்டணி மற்றும் மத்தியில் என்டிஏ கூட்டணி என்பதற்கு மகாராஷ்டிராவில் இரட்டை இஞ்சின் ஆட்சி என்று பொருள், அதற்கு வளர்ச்சி இரட்டை வேகத்தில் இருக்கும் என்று அர்த்தம். மகா விகாஸ் அகாடி கூட்டணியின் வாகனத்தில் சக்கரமும் இல்லை, பிரேக்கும் இல்லை. அந்த வாகனத்தை ஓட்டுவதற்கு அவர்களுக்குள்ளேயே சண்டை நிலவுகிறது.
ஒரு கட்சி தனது தலைவரை முதலமைச்சராக அறிவிப்பதில் நாள் முழுவதும் மும்முரமாக உள்ளது. மற்ற கட்சிகளும், காங்கிரசும் அதை நிராகரிப்பதில் மும்முரமாக உள்ளன. இதுபோன்ற கட்சிகள் மகாராஷ்டிராவில் நிலையான ஆட்சியை அமைக்க முடியாது. மகாராஷ்டிராவிற்கு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு மகாயுதி அரசாங்கம் தேவை" என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications