டிகே சிவக்குமார் கையை பிடித்து கொண்டு விடாத மோடி.. அம்பானி மகன் திருமணத்தில் சுவாரசியம்
மும்பை: பெரும் கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சன்ட் ஜோடிக்கு திருமணம் நடந்துள்ளது. இன்று புதுமண ஜோடியை பிரதமர் மோடி நேரில் வாழ்த்தினார். இந்த வேளையில் அங்கிருந்த கர்நாடகா காங்கிரஸ் தலைவரும், துணை முதல்வருமான டிகே சிவக்குமாரை பார்த்த பிரதமர் மோடி அவரின் கையை பிடித்து கொண்டு விடாமல் இருந்த வீடியோ வெளியாகி உள்ளது.
பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் ஜோடிக்கு நேற்று முன்தினம் திருமணம் நடந்தது. மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான பிகேசி கன்வென்ஷன் சென்டரில் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணம் கோலாகலமாக நடந்தது.

இந்த திருமணத்தில் வெளிநாடுகளை சேர்ந்த பிரபலங்கள், நம் நாட்டை சேர்ந்த பிரபலங்கள் பங்கேற்று திருமண ஜோடியை வாழ்த்தினர். குறிப்பாக பாலிவுட் நடிகர், நடிகைகள், தமிழகத்தில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் சென்றார். அதேபோல் நடிகர் சூர்யா - ஜோதிகா, இயக்குநர் அட்லி - பிரியா, விக்னேஷ் சிவன் - நயன்தாரா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
அதேபோல் ஏராளமான அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்று புதுமண ஜோடியை வாழ்த்தினர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், அவரது மகன் தேஜஸ்வி யாதவ், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் கட்சிகளின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். அதன்படி மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங், கர்நாடகா துணை முதல்வரும், அம்மாநில காங்கிரஸ் தலைவருமான டிகே சிவக்குமார் உள்பட மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ், பாஜக தலைவர்கள் பங்கேற்றனர்.
பிரதமர் மோடியும் நேரில் சென்று ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் ஜோடியை வாழ்த்தினார். அதன்பிறகு ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன் ஆகியோருடன் பிரதமர் மோடி சேர்ந்து போட்டோ எடுத்து கொண்டார். முன்னதாக விழாவுக்கு வந்த பிரதமர் மோடியை முகேஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி ஆகியோர் வாசல் வரை சென்று வரவேற்றார். நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு பிரதமர் மோடி வந்தபோது அங்கு டிகே சிவக்குமார் உள்பட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அமர்ந்து இருந்தனர்.
அப்போது பிரதமர் மோடியை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் எழுந்து நின்றனர். இதை கவனித்த மோடி கைகளை கூப்பியபடி நடந்து வந்தார். இந்த சமயத்தில் டிகே சிவக்குமாரும் எழுந்து நின்ற நிலையில் பிரதமர் மோடி அவரை நோக்கி கைக்கூப்பினார். பதிலுக்கு டிகே சிவக்குமாரும் கைகூப்பி வணக்கம் தெரிவித்தார். அதன்பிறகு இருவரும் கைககள் குலுக்கி கொண்டு பரஸ்பரம் நலம் விசாரித்தபடி சிரித்து கொண்டனர். இந்த வேளையில் பிரதமர் மோடி சில வினாடிகள் டிகே சிவக்குமாரின் கையை விடாமல் கெட்டியாக பிடித்தபடி பேசி கொண்டிருந்தார்.
இந்த வேளையில் டிகே சிவக்குமாரின் அருகே மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான திக்விஜய் சிங் உள்பட பலர் இருந்தனர். ஆனால் அவர்களிடம் கைகளை குலுக்காத பிரதமர் மோடி, டிகே சிவக்குமாரிடம் மட்டுமே கைக்குலுக்கினார். அதனை அருகே நின்ற முகேஷ் அம்பானி அவரது மகன் ஆனந்த் அம்பானி உள்பட அனைத்து காங்கிரஸ் தலைவர்களும் வியந்து பார்த்தபடி நின்றனர். இது அனைவரையும் கவனிக்க வைத்தது. இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
இந்த வீடியோ அதிக முக்கியத்துவம் பெற என்ன காரணம் என்றால் பிரதமர் மோடி பாஜகவை சேர்ந்தவர். டிகே சிவக்குமார் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். டிகே சிவக்குமார் கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவராக கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பாஜகவை வீழ்த்தினார். தற்போது அவர் கர்நாடகா காங்கிரஸ் தலைவர் பதவியோடு, துணை முதல்வராகவும் உள்ளார். அதுமட்டுமின்றி பல சந்தர்ப்பங்களில் அதாவது ராஜ்யசபா உள்ளிட்ட தேர்தல் சமயங்களில் காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாஜக இழுக்க முயன்றால் அவர்களை டிகே சிவக்குமார் தான் பாதுகாத்து அனுப்பி வைத்த வரலாறு உள்ளது. இத்தகைய சூழலில் தான் பல காங்கிரஸ் தலைவர்கள் இருக்க டிகே சிவக்குமாரிடம் மட்டும் பிரதமர் மோடி கைக்குலுக்கி பேசியது அனைவருக்கும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications