மகாராஷ்டிராவில் அடுத்து எங்க ஆட்சிதான்! உறுதியாக கூறும் உத்தவ் டீம்!
மும்பை: மகாராஷ்டிராவில் அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த முறை நாங்கள்தான் ஆட்சியை பிடிப்போம் என உத்தவ் தாக்ரே சிவசேனா தலைமையிலான மகாவிகாஸ் கூட்டணி நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.
இந்தியாவில் மிக முக்கிய அரசியல் செயல்பாடுகளை கொண்ட மாநிலம் மகாராஷ்டிரா. இம்மாநிலத்தில் தற்போது வரை சிவசேனாதான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஒரு காலத்தில் உத்தவ் தாக்ரே தலைமையில் ஓரணியாக இருந்த சிவசேனா, இப்போது ஏக்நாத் ஷிண்டே அணி, உத்தவ் அணி என இரண்டாக பிரிந்திருக்கிறது. மறுபுறம், தேசியவாத காங்கிரஸும் சரத்பவார் அணி, அஜித் பவார் அணி என பிரிந்து இருக்கிறது.

இந்த பிரிவுக்கு பாஜக அரசியலே காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. தற்போது ஏக்நாத் ஷிண்டே அணி+அஜித் பவார் அணி+பாஜக கூட்டணி மகாராஷ்டிராவை ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில் நவம்பர் மாதம் 20ம் தேதி இம்மாநிலத்திற்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதில் உத்தவ் தாக்ரே தலைமையிலான மகா விகாஸ் கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என சிவசேனா (UBT) தலைவர் அனில் பரப் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மகா விகாஸ் கூட்டணி ஆட்சிக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது. தற்போது கூட்டணிக்குள் தொகுதி பங்கீடு நிறைவு செய்யப்பட்டிருக்கிறது. எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து அறிவிப்பு வெளியானவுடன் பிரசாரம் தொடங்கிவிடும்" என்று கூறியுள்ளார்.
மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் 260 தொகுதிகளில் மகா விகாஸ் கூட்டணி உடன்பாட்டை எட்டி இருக்கிறது. அதன்படி அதிகபட்சமாக காங்கிரஸ் 115 தொகுதிகளிலும், உத்தவ் அணி 85 தொகுதிகளிலும், சரத்பவார் அணி 75 தொகுதிகளிலும், சமாஜ்வாடி 3, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.
மறுபுறம் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாயுதி கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படவில்லை. இதற்கு காரணம் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கூடுதல் தொகுதிகளை கோருவதுதான். என்னதான் ஷிண்டே முதல்வராக இருந்தாலும், பாஜகவின் கைப்பாவையாகவே அவர் செயல்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. தொகுதி பங்கீட்டிலும் அவரது கட்சிக்கு குறைவான தொகுதிகளே ஒதுக்க பாஜக முன்வந்திருக்கிறது.
ஆனால் ஷிண்டே இதை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் இழுபறி நீடித்து வருகிறது. பாஜக தரப்பில், "நாங்கள் எப்படி முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்தோமோ அதேபோல நீங்கள் தொகுதி பங்கீட்டில் விட்டுக்கொடுக்க வேண்டும்" என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இருப்பினும் ஷிண்டே இறங்கி வர மறுத்திருக்கிறார். தற்போது நடக்கும் பேச்சுவார்த்தையின்படி பாஜக 160 தொகுதிகள் வரையிலும், ஷிண்டே தரப்பு சிவசேனா 75 தொகுதிகள் வரையிலும், அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 60 தொகுதிகளிலும் போட்டியிட திட்டமிடப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications