உத்தவ் தாக்கரேவை தூக்கி எறியும் சரத்பவார்? சுப்ரியா சுலே முதல்வராக ரகசிய ப்ளான்? பற்ற வைக்கும் பாஜக
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சியுடனான உறவை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் விரைவில் முறித்து விடுவார்; சரத்பவார் தமது மகள் சுப்ரியா சுலேவை முதல்வராக்க ரகசிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறார் என பாஜக தலைவர்கள் அடுத்தடுத்து கூறிவருவது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிராவில் 288 சட்டசபை தொகுதிகளுக்கும் நவம்பர் 20-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அனைத்து தொகுதி வாக்குகளும் நவம்பர் 23-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

மகாராஷ்டிராவில் ஆளும் மகாயுதி கூட்டணி, எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி இடையே கடும் போட்டி நிலவுகிறது. மகாயுதி கூட்டணியில் முதல்வர் ஷிண்டே சிவசேனா, அஜித்பவார் தேசியவாத காங்கிரஸ் ஆகியவற்றுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையை சுமூகமாக மேற்கொண்டு வருகிறது பாஜக. மேலும் அனைத்து அரசியல் கட்சிகளையும்விட பாஜக முந்திக் கொண்டு முதல் வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுவிட்டது.
ஆனால் மகா விகாஸ் அகாடியில் முதல்வர் வேட்பாளர், தொகுதிகள் பங்கீடு என் இழுபறி நீடித்துக் கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மகாராஷ்டிரா மாநில பாஜக தலைவர்கள் தெரிவித்து வரும் தகவல்கள் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மகா விகாஸ் அகாடியில், உத்தவ் தாக்கரே சிவசேனாவை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் விரைவில் கழற்றிவிடப் போகிறார்; சரத் பவார் தமது மகள் சுப்ரியா சுலே எம்பியை முதல்வராக்குவதற்கான ரகசிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்பதுதான் பாஜக தலைவர்கள் கொளுத்திப் போடுகிற தகவல்.
அதேநேரத்தில் சரத்பவார், பாஜகவுடன் இணைந்து செயல்பட திட்டம் வைத்துள்ளாரா? என்ற கேள்விக்கு அக்கட்சித் தலைவர்கள் பதிலளிக்கவும் மறுக்கின்றனர். சரத்பவார், பாஜகவை எதிரிக் கட்சியாக பார்த்தது இல்லை; பாஜகவுடன் நட்புக்கரம் நீட்டியபடிதான் இருக்கிறார் என்பது வெளிப்படையான ஒன்றுதான். இதனால் சரத்பவார் எந்த முடிவையும் எந்த நேரத்திலும் எடுக்கக் கூடிய சாத்தியங்கள் இருக்கிறது என்கின்றனர் மகாராஷ்டிரா அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications