பாஜக வேட்பாளருக்கு ஆதரவு கிடையாது.. இந்து மக்கள் கட்சி அதிரடி முடிவு.. பரபர நாகை.. பின்னணி என்ன?
நாகப்பட்டினம்: நாகை பாஜக வேட்பாளர் எஸ்.ஜி.எம் ரமேஷுக்கு ஆதரவு கிடையாது என இந்து மக்கள் கட்சியின் நாகபட்டினம் மாவட்ட தலைவர் விஜயேந்திரன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளும் நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தமிழ்நாடு, புதுச்சேரியில் 24 தொகுதிகளில் தாமரை சின்னத்தில் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது பாஜக. பாஜகவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சியும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

நாகப்பட்டினம் லோக்சபா தொகுதியில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வை.செல்வராஜ், அதிமுக சார்பில் சுர்சித் சங்கர், பாஜக சார்பில் எஸ்.ஜி.எம் ரமேஷ், நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா உள்ளிட்டோர் களமிறங்கி உள்ளனர்.
இந்நிலையில், பாஜக வேட்பாளர் எஸ்.ஜி.எம் ரமேஷை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஏற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, இந்து மக்கள் கட்சியினருக்கு, பாஜக வேட்பாளர் ரமேஷ் தரப்பு அழைப்பு விடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
அதேபோல, தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது இந்து மக்கள் கட்சி கொடியை பாஜக வேட்பாளர் ரமேஷ் புறக்கணிப்பதாகவும், தேர்தல் நோட்டீஸ், பேனர்களிலும், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்தின் புகைப்படம் மற்றும் கொடியை புறக்கணிப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனால், நாகை மாவட்ட இந்து மக்கள் கட்சியினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். நாகை பாஜக வேட்பாளர் ரமேஷ், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்தின் புகைப்படம் மற்றும் கொடியை புறக்கணிப்பதால் அவருக்கு ஆதரவு கிடையாது என இந்து மக்கள் கட்சி நாகை மாவட்ட தலைவர் விஜயேந்திரன் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம் தொகுதி பாஜக வேட்பாளராக களமிறங்கியுள்ள எஸ்.ஜி.எம். ரமேஷ், திருவாரூர் மாவட்டம் சித்தமல்லியை சேர்ந்த முன்னாள் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி எஸ்.ஜி. முருகையனின் மகன். எஸ்.ஜி.முருகையன் மன்னார்குடி பகுதியில் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களின் முக்கிய தலைவராக இருந்தார். எம்.பியாக இருந்தபோதே படுகொலை செய்யப்பட்டார்.
அ.தி.மு.கவில் திருவாரூர் எம்.ஜி.ஆர் இளைஞர் பேரவை துணைத் தலைவராக இருந்த ரமேஷ், சில ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் இணைந்தார். இவரது மைத்துனர்தான் தற்போது நாகப்பட்டினம் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பியாக இருக்கும் செல்வராஜ். எஸ்.ஜி.எம் ரமேஷின் மாமனார் தி.மு.க விவசாய அணி செயலாளரும், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியுமான ஏ.கே.எஸ்.விஜயன். இப்படி இவர்களது குடும்பமே பாரம்பரியம் மிக்க அரசியல் குடும்பம்.
நாகை பகுதியில் செல்வாக்கு பெற்றுள்ள ரமேஷ், கடந்த 2022ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். இந்நிலையில், அண்ணாமலையின் ஆதரவோடு நாகை வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இந்நிலையில், அவர் இந்து மக்கள் கட்சியை புறக்கணித்து வருவதால், அக்கட்சியினர் அப்செட் ஆகியுள்ளது பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications