வீட்டை விட்டு வெளியே வர மாட்டோம்..2 ஆண்டுகளாக அடம்பிடித்த குடும்பம்.. விசாரித்த அதிகாரிகளுக்கு ஷாக்
நாகர்கோவில்: நாகர் கோவிலில் கொரோனாவிற்கு பயந்து இரண்டு ஆண்டுகளாக வீட்டை விட்டு வெளியே வர மறுத்து 4 பெண்கள் வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து சமூக நலத்துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
நாகர் கோவில் நேசமணி நகர் பழைய எஸ்டேட் வங்கி காலனியில் பெண் ஒருவர் தனது 25 வயதில் ஒரு மகளும் 26 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.இவர்களுடன் அவர்களின் உறவுக்கார வயதான பெண் ஒருவரும் வசித்து வருகிறார். இந்த வீட்டில் வசித்து வரும் 4 பேரும் கடந்த 2 ஆண்டுகளாகவே வெளியில் வராமல் வீட்டை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு இருந்துள்ளனர்.

வீட்டிற்கு தேவையான பொருட்களை ஆன்லைனில் வாங்கிக் கொண்டு வீட்டை விட்டு ஒரு நிமிடம் கூட வெளியே வராமல் இருந்துள்ளனர். அவர்களுக்கு சொந்தமாக பல கடைகள் இருப்பதாகவும் அதை வாடகை விட்டு அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு அவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடப்பதாகவும் கூறப்படுகிறது.
2 ஆண்டுகளாகவே வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கிறார்களே என்பதை கவனித்த அக்கம் பக்கத்தினர் அந்த வீட்டினரிடம் விசாரித்துள்ளனர். ஆனால், வீட்டை விட்டு வெளியே வர மாட்டோம் என கூறியிருக்கின்றனர். 4 பேரும் கொரோனாவிற்கு பயந்து 2 ஆண்டுகளாக வீட்டிற்குளேயே முடங்கி கிடப்பதாக தகவல் பரவியது. இது குறித்த தகவல் சமூக நலத்துறைக்கும் கிடைத்தது.
இதையடுத்து, அந்த வீட்டிற்கு சமூக நலத்துறை அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஆனால் அதிகாரிகளிடம் கேட்டும் அவர்கள் வெளியே வர மறுத்து அடம் பிடித்தனர். ஜன்னலை திறந்து எட்டி பார்ப்பது செல்போனில் படம் பிடித்ததோடு வெளியே வர மறுத்து விட்டனர். இதனால் போலீசாருக்கு சமூக நலத்துறை அதிகாரிகள் தகவல் கொடுத்தனர்.
அதன்படி போலீசார் மற்றும் தீ அணைப்பு படையினர் விரைந்து வந்து வீட்டின் வெளிப்பக்க கேட்டை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது எனினும் வீட்டிற்குள் உள்பக்கமாக பூட்டிக்கொண்டு வெளியே வர மறுத்து விட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, எங்களுக்கு சொந்தமான கடை வாடகைக்கு விட்டு இருக்கிறோம்.
மணிமேடை பகுதியில் இருக்கும் அத கடையை நடத்தி வருபவர் கடையின் முன் கண்ணாடி வைத்து இருக்கிறார். அதை அகற்றும்படி மாநகராட்சி அதிகாரிகள் கூறி வருகிறார்கள். எனவே நாங்கள் வந்தால் எங்களிடம் விசாரணை நடத்த வாய்ப்புள்ளது. கொரோனா வைரஸ் பரவல் இன்னும் உள்ளது. எனவே நாங்கள் வெளியே வர முடியாது" என்றனர். இதைத்தொடர்ந்து அந்தப் பெண்ணிடம் மனு ஒன்றை வாங்கிவிட்டு அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "அந்த வீட்டில் தாய் மற்றும் அவரது இரண்டு மகள்கள் உறவுக்கார பெண் என மொத்தம் 4 பேர் இருக்கிறார்கள். வெளியாட்களுக்கு பயந்து வீட்டிற்குள் இருப்பதாக சொல்கிறார்கள். அவருடைய 2 மகளும் நன்கு படித்தவர்கள். சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போல தெரிகிறது. அவர்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றனர்.












Click it and Unblock the Notifications