'அப்படி போடு'.. நாசாவில் வேலை எப்படி இருக்கும் தெரியுமா.. என்னது மிட்டாய் கடையா? வியக்க வைத்த பெண்மணி
நாசாவில் வேலை குறித்து பெண் விஞ்ஞானி தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்
நியூயார்க்: நாசாவின் அறிவியல் துறையின் தலைவராக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் விஞ்ஞானி ஒருவர், "இதுதான் உலகின் சிறந்த வேலை" என்று கூறியுள்ளார்.
இங்கிலாந்தின் ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் பகுதியை சேர்ந்தவர் டாக்டர் நிக்கோலா ஃபாக்ஸ். இவர்தான் தற்போது நாசாவின் அறிவியல் துறையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த துறைக்கு ஒரு பெண்மணி தலைவராக தேர்வாவது இதுதான் முதல் முறை. சமீபத்தில் தனியார் செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த அவர் தனது பணி குறித்து மேற்குறிப்பிட்ட கருத்தை கூறியுள்ளார்.
பேட்டியில் அவர் பேசியதாவது, "நான் லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் முதுகலை படித்துக்கொண்டிருந்தபோது நாசாவின் ஒரு மீட்டிங்கில் பங்கேற்றிருந்தேன். அதேபோல அலாஸ்காவில் நடந்த மற்றொரு மீட்டிங்கிலும் நான் பங்கேற்றிருந்தேன். நாசாவில் பணியாற்ற வேண்டும் என்கிற ஆர்வம் அப்போதுதான் எனக்குள் தோன்றியது.

ஆர்வம்
நாம் எதில் ஆர்வமாக இருக்கிறோமா? நம்முடைய மனம் எந்த விஷயத்தில் அதிக ஈடுபாட்டுடன் இருக்கிறதோ அதைதான் நாம் செய்ய வேண்டும். அதுதான் நம்முடைய வளர்ச்சிக்கு உதவும். அதையேதான் நானும் செய்தேன். ஆனால் நான் நாசாவில் வேலை பார்ப்பேன் என்று நினைத்து பார்க்கவே இல்லை. இருப்பினும் எதிர்பாராத விதமாக முதல்முறையாக 2018ம் ஆண்டு நாசாவில் சேர்ந்தேன். சில ஆண்டுகள் பணியாற்றி பின்னர் சூரியனை ஆய்வு செய்யும் துறையான 'ஹீலியோ பிசிக்ஸ்' பிரிவில் இயக்குநர் பொறுப்புக்கு தேர்வானேன். சூரியனின் கதிர்வீச்சுகள் பூமி மற்றும் இதர கிரகங்களை எப்படி பாதிக்கிறது என்பதை ஆய்வு செய்வதும், அதனை மேற்பார்வையிடுவதும்தான் என்னுடைய வேலையாக இருந்தது.

சிறுமி
தினமும் அதிகாலை 4.30 மணியளவில் படுக்கையிலிருந்து எழுந்து கொள்கிறேன். வேலைக்கு வரும்போது எனக்கு அளப்பறிய அளவில் உற்சாகம் வந்து விடுகிறது. ஏனெனில் நான் இந்த கிரகத்தில் மிக சிறந்த வேலையை செய்து கொண்டிருக்கிறேன். தற்போது இந்த பொறுப்பிலிருந்து எனக்கு வேறு ஒரு பெரிய பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அறிவியல் துறையின் தலைவர் என்கிற பொறுப்புதான் அது. இந்த சம்பவத்தை என்னால் மறக்கவே முடியாது. ஏனெனில் நான் மிட்டாய் கடையில் நின்று கொண்டிருக்கும் ஒரு சிறுமியை போல இப்போது உணர்கிறேன்" என்று கூறியுள்ளார்.

விருதுகள்
நிக்கோலா ஃபாக்ஸுக்கு 2021 மற்றும் 2022ம் ஆண்டுகளில் நாசாவின் உயரிய விருதுகள் கொடுத்து கவுரவிக்கப்பட்டுள்ளது. நிலவில் முதன் முதலாக மனிதனை கொண்டு சென்றது நாசாதான். இது மனித குல வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாகும். இந்த சாதனைக்கு பின்னர்தான் நாசா சர்வதேச அளவில் பரவலாக அறியப்பட்டது. இதனையடுத்து புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன் மற்றும் அதன் துணைக்கோள்கள், சனி மற்றும் அதனுடைய துணைக்கோள்கள் என சூரிய குடும்பம் முழுவதும் நாசா தன்னுடைய ஆய்வை விரிவாக்கியது.

பணி
மேற்குறிப்பிட்ட அனைத்து கிரகங்களுக்கும் நாசா செயற்கை கோள்கள் அனுப்பி ஆய்வு செய்து வருகிறது. அதேபோல நாம் வாழும் பூமியை தவிர்த்து வேறு ஏதாவது கோள்களில் தண்ணீர் இருக்கிறதா? அல்லது உயிரினங்கள் வாழ்கின்றனவா? என்பது குறித்தும் நாநா தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. இந்நிலையில் இதன் முக்கியமான துறையின் தலைவராக உள்ள நிக்கோலா ஃபாக்ஸ் தனது வேலை குறித்து கூறியிருப்பது பேசுபொருளாகியுள்ளது.












Click it and Unblock the Notifications